தெஹ்ரான்: முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று கூறி 22 வயது இளம் பெண் ஒருவர் ஈரான் நாட்டு காவல்துறையால் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மாஷா அமினி என்று அழைக்கப்படும் இந்த பெண்ணின் உயிரிழப்பு நாடு முழுவதும் பெண்களை போராட்டக்களத்தை நோக்கி நகர்த்தியுள்ளது.
இந்த போராட்டத்தில் அரசு அடக்குமுறையை கையாண்டுள்ள நிலையில் போராட்டங்கள் கலவரமாக மாறியுள்ளன. இதில் தனது சகோதரர் உயிரிழந்த நிலையில், தனது முடியை சகோதரனின் கல்லறையில் இளம்பெண் ஒருவர் வெட்டி எறிந்துள்ளார்.
தாக்குதல்
கடந்த 15ம் தேதி குர்திஸ்தானை சேர்ந்த மாஷா அமினி (வயது 22) எனும் இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை பரிசோதனை செய்த கலாச்சார காவல் குழுவினர், ஹிஜாப்பை சரியாக அணியவில்லையென்று மாஷா அமினி மீது தாக்குதல் நடத்தி கைது செய்தனர். காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கும் தாக்குதல்கள் தொடர்ந்துள்ளன.
உயிரிழப்பு
இதனால் மயக்கமடைந்த மாஷா அமினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆனால் கோமாவில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 17ம் தேதி உயிரிழந்துவிட்டார். ஏற்கெனவே நாடு முழுவதும் ஹிஜாப் கட்டாயம் எனும் சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த படுகொலை சம்பவம் இப்போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. அமினியின் சொந்த ஊரான சாகேஸ் பகுதியில் அமினியின் கல்லறை அருகே திரளான அளவில் திரண்ட பெண்கள் ஹிஜாபை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கலவரம்
கடந்த 18ம் தேதி தொடங்கிய இந்த போராட்டம் காட்டு தீயை போல நாடு முழுவதும் பரவியுள்ளது. சுமார் 50 நகரங்களில் தற்போது போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டக்காரர்கள் ‘இஸ்லாமிய குடியரசுக்கு’ எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது பாதுகாப்புப் படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50ஐ கடந்துள்ளது. அதேபோல போராட்டக்காரர்களின் தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்ததாகவும் சொல்லப்படுகிறது.
சகோதரியின் செயல்
போரட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் ஜவத் ஹெய்டாரி எனும் இளைஞர் உயிரிழந்துள்ளார். இந்த இளைஞரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற அவரது சகோதரி, ஜவத்தின் உடல் அடக்கம் செய்யப்பட்ட பின்னர் அதில் தனது முடியையும் கத்தரிக்கோல் கொண்டு வெட்டி எறிந்துள்ளார். இது போராட்டக்காரர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் ஒரு முறை என்று சொல்லப்படுகிறது. ஏனெனில், இஸ்லாமிய அடிப்படைவாத நாடான ஈரானில் பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கட்டுப்பாடு
மாஷா அமினியின் உயிரிழப்புக்கு முன்னிருந்தே கனன்று கொண்டிருந்த ஹிஜாப் எதிர்ப்பு குரல்கள், தற்போது அமினியின் மரணத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் தீவிரமாக பற்றி எரியத் தொடங்கியுள்ளன. அதேபோல போராட்டத்தை ஒடுக்க அரசு மேற்கொண்டுள்ள அடக்குமுறை காரணமாக அதிகரிக்கும் வன்முறைகள் மற்றும் அதில் ஏற்படும் உயிரிழப்பு ஆகியவை எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவதை போல மாறியுள்ளது. நாடு முழுக்க நடந்து வரும் உரிமை போராட்டங்களில் பங்கேற்றுள்ள போராட்டக்காரர்களிடம் கடுமையான முறையில் நடந்துகொள்ள கூடாது என அந்நாட்டு பாதுகாப்புத்துறைக்கு ஐநா பொதுச்செயலாளர் வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.