மியான்மரில் சிக்கியிருந்த 20 தமிழர்கள் மீட்கப்பட்டு தாய்லாந்துதலைநகர் பாங்காக்கில் பத்திரமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் தமிழகம் திரும்புவதற்கான பயணச் செலவு முழுவதையும் தமிழக அரசு ஏற்கும் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார். தனியார் ஆள் சேர்ப்பு நிறுவனங்கள் மூலம், பல்வேறு வேலைகளுக்காக தாய்லாந்து சென்ற தமிழர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள், மியான்மரில் தாக்குதலுக்கு ஆளாகினர்.
அவர்களை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழர்களை தாயகம் அழைத்து வருவதற்கான பயணச் செலவை ஏற்பதாக மத்திய வெளியுறவு அமைச்சகத்திடம் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் கேட்ட போது, “மியான்மரில் சிக்கியுள்ள 20 தமிழர்கள் உட்பட பலர் பத்திரமாக மீட்கப்பட்டு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கரோனா கட்டுப்பாடு இருப்பதால், 27-ம் தேதிக்கு பிறகு இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதாக கூறியுள்ளனர். தேதி உறுதியானதும், அவர்களுக்கான விமான டிக்கெட்டை தமிழக அரசு ஏற்பாடு செய்யும்’’ என்றார்.