புதுடெல்லி: தாய்லாந்தில் வேலைக்கு சென்ற 200 இந்தியர்கள் மியான்மருக்கு கடத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தாய்லாந்தில் டிஜிட்டல் சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் வேலைகளுக்கு ஆள் எடுப்பதாக இந்திய இளைஞர்களைக் குறிவைத்து போலி விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. இந்த விளம்பரங்கள் கால் சென்டர் மற்றும் கிரிப்டோகரன்சி தொடர்பான மோசடிகளில் ஈடுபடும் போலி நிறுவனங்களால் செய்யப்படுகின்றன. எனவே, சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்படும் போலி வேலைவாய்ப்பு விளம்பரங்களை இந்திய இளைஞர்கள் நம்பி ஏமாற வேண்டாம். துபாய் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த வேலைவாய்ப்பு முகவர்கள் மூலமும் இந்தப் போலி விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.
இந்தப்போலி விளம்பரங்களை நம்பி வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள், சட்டவிரோதமாக மியான்மருக்கு கடத்திச் செல்லப்பட்டு, மோசமான சூழலில் வேலை செய்ய வைக்கப்படுகின்றனர். ஐடி துறையைச் சேர்ந்தவர்களைத்தான் இந்த மோசடி நிறுவனங்கள் குறிவைக்கின்றன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.