பெங்களூரு,
மைசூரு தசரா விழா உலகப்புகழ் பெற்றது. கர்நாடகத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் சாமுண்டீஸ்வரி அம்மன் விஜயதசமி அன்று மகிஷாசூரன் எனும் அரக்கனை வதம் செய்த வெற்றி கொண்டாட்டத்தையே தசரா விழாவாக கர்நாடக மக்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த தசரா விழா ‘நாட ஹப்பா'(கர்நாடகத்தின் பண்டிகை) என்றும் அழைக்கப்படுகிறது.
கர்நாடகத்தின் அடையாளமாக கருதப்படும் இந்த தசரா திருவிழா கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் எளிமையாக மைசூரு அரண்மனை வளாகத்திலேயே நடந்து முடிந்தன. மேலும் சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டன. கொரோனா பரவல் குறைந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டு தசரா விழா கர்நாடக அரசால் கோலாகலமாக கொண்டாடப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்து இருந்தார். அதேபோல் இந்த ஆண்டு தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக அரசு சார்பில் ரூ.36 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
பாரம்பரியம் மிக்க இந்த விழாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கி வைக்கிறார். இந்திய ஜனாதிபதியாக திரவுபதி முர்மு கடந்த ஜூலை மாதம் 25-ந்தேதி தான் பொறுப்பேற்றார். இந்த நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, தசரா விழாவை தொடங்கி வைக்கவும், மேலும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று (திங்கட்கிழமை) கர்நாடகம் வருகிறார். அவர் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு உள்நாட்டுக்குள் மேற்கொள்ளும் முதல் சுற்றுப்பயணம் இதுவாகும். மைசூரு, பெங்களூரு, தார்வாரில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்கிறார்.
இன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அவர் மைசூரு மண்டஹள்ளியில் உள்ள விமான நிலையத்துக்கு வருகிறார். அவரை கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் வரவேற்கிறார்கள். இதையடுத்து ஜனாதிபதி திரவுபதி முர்மு அங்கிருந்து சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு சென்று விசேஷ பூஜைகள் செய்து வழிபடுகிறார்.
இதையடுத்து இன்று காலை 9.45 மணி முதல் காலை 10.05 மணிக்குள் விருச்சிக லக்கனத்தில் அங்கு வெள்ளித் தேரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து பூக்களை அம்மன் மீது வீசுவதன் மூலம் உலக புகழ் பெற்ற மைசூரு தசரா விழாவை தொடங்கி வைக்கிறார்.
அவருடன் கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மத்திய மந்திரிகள் பிரகலாத் ஜோஷி, நிர்மலா சீதாராமன், ஷோபா, மாவட்ட பொறுப்பு மந்திரி எஸ்.டி.சோமசேகர் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். தசரா விழாவை ஜனாதிபதி தொடங்கி வைப்பது இதுவே முதல் முறை ஆகும். இதற்கு முன்பு எழுத்தாளர்கள், கவிஞர்கள் போன்றோரே தொடங்கி வைத்து வந்தனர்.இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடந்து வருகிறது.
இதையடுத்து காலை 11 மணி அளவில் மைசூரு மண்டஹள்ளி விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு செல்கிறார்.
10 நாட்கள் நடக்கும் இந்த கோலாகல விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. தசரா விளையாட்டு தீப்பந்த ஊர்வலம், தொழில் கண்காட்சி, மலர் கண்காட்சி, உணவு திருவிழா, தசரா விளையாட்டு போட்டிகள், குஸ்தி போட்டி,பொருட்காட்சி, யோகா பயிற்சி, அரண்மனை வளாகத்தில் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி மலர் கண்காட்சி, சிற்பம் மற்றும் ஓவிய கண்காட்சி, சிறப்பு மின்னொளி காட்சி, மகளிர் தசரா, குழந்தைகள் தசரா, திரைப்பட விழா இப்படி எண்ணற்ற நிகழ்ச்சிகள் தொடங்கி நடைபெற உள்ளன. கர்நாடகத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையிலும், புதியவற்றை அர்த்தமுள்ளதாக எடுத்துரைக்கும் வகையிலும் இந்த திருவிழாக்கள் நடைபெற உள்ளன.