கான்பெரா: ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரத்தையொட்டியுள்ள கடற்பரப்பில் 22 நாடுகள் பங்கேற்கும் ‘ககாடு-2022’ எனும் கூட்டுப்பயிற்சி நடந்து முடிந்துள்ளன.
இந்த பயிற்சியில் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ள சாத்புரா “ஸ்டெல்த்” போர்க்கப்பல் தனது திறனை அபாரமாக வெளிக்காட்டியுள்ளது. இந்த கப்பல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பயிற்சியில், 22 நாடுகளின் 15 போர்க்கப்பல்கள் மற்றும் 30க்கும் அதிகமான போர் விமானங்கள் பங்கேற்றன. கடந்த 12ம் தேதி தொடங்கிய இந்த பயிற்சி 24ம் தேதி வரை நடைபெற்றது.
பயிற்சி
கூட்டாண்மையை பலப்படுத்த ஆண்டு தோறும் ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதியில் உள்ள டாவின் நகரத்தையொட்டியுள்ள கடற் பகுதியில் கூட்டு பயிற்சி மேற்கொள்ளப்படும். ‘ககாடு’ என்று அழைக்கப்படும் இந்த பயிற்சி சுமார் 20 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நடப்பாண்டில் நடைபெற்ற பயிற்சியில் 22 நாடுகளை சேந்த சுமார் 3,000 கடற்படை/விமானப்படை வீரர்களும், 15 போர் கப்பல்கள் மற்றும் 30க்கும் அதிகமான போர் விமானங்களும் பங்கேற்றன.
உலக நாடுகளுடன் புரிதல்
இந்தியா சார்பில் பங்கேற்றிருந்த ‘சாத்புரா’ தனது முழு திறனையும் இந்த பயிற்சியில் வெளிக்காட்டியுள்ளது. இது தொடர்பாக கடற்படை அதிகாரி ஒருவர், “சாத்புரா பயிற்சியின் போது நீர்மூழ்கி கப்பல்களுக்கு எதிராக தனது திறனை சிறப்பாக வெளிக்காட்டியது. மட்டுமல்லாது தனது இலக்குகளையும் துல்லியமாக தாக்கியுள்ளது. உலக நாடுகள் மத்தியில் நமது திறனை சாத்புரா சிறப்பாக வெளிக்காட்டியுள்ளது. இந்த பயிற்சி உலக நாடுகள் மத்தியில் பரஸ்பர புரிதலை நோக்கமாக கொண்டுள்ளது” என்று கூறினார்.
முக்கிய அஸ்திரம்
ஐஎன்எஸ் சாத்புரா கப்பல் சுமார் 6000 டன் எடை கொண்டது, இது ஏவுகணை இடைமறித்து தாக்கும் திறன் கொண்டது. இந்த கப்பல் மும்பையில் உள்ள mazagon dock எனும் நிறுவனத்தால் 2002ம் ஆண்டு கட்ட தொடங்கப்பட்டு 2010ல் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது. பின்னர் விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திய கடற்படை தளத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டது. சுமார் 142.5மீ நீளமும், 16.9 அகலமும் கொண்ட இந்த “ஸ்டெல்த்” கப்பல் இந்திய கடற்படையின் முக்கிய அஸ்திரமாகும்.அதாவது இது ரகசியமாக சென்று தாக்கும் திறன் கொண்டது.
திறன்
கடலில் மணிக்கு 59 கி.மீ வேகத்தில் பயணிக்கும் இந்த கப்பல் பிரமோஸ் வகை ஏவுகணைகளை தாங்கி செல்லும் திறன் கொண்ட வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் 32 Barak 1 ரக ஏவுகணைகள், 24 ராணுவ கவச வாகனங்கள், 8 பிரமோஸ் வகை ஏவுகணைகள், ஒரு OTO Melara 76 mm ரக இயந்திர துப்பாக்கி, இரண்டு ஏகே630 ரக இயந்திர துப்பாக்கி, ஏவுகணை தாக்குதலிலிருந்து தப்பிக்க உதவும் RBU-6000 ஏவுகணை தடுப்பு ஆயுதம், இரண்டு ஹெலிகாப்டர்கள் என இவை அனைத்தையும் சாத்புரா கப்பல் கொண்டிருக்கிறது.