சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூர்யா42’ படத்தின் பணிகள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது, 3டி தொழில்நுட்பத்தில் ஆக்ஷன் நிறைந்து உருவாகும் இந்த படம் கிட்டத்தட்ட 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. சூர்யா42 படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது, சமீபத்தில் வெளியான இப்படத்தின் மோஷன் பிக்ச்சர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. படக்குழு படத்தின் சில காட்சிகளை சென்னையில் நடத்தி முடித்துவிட்டு படத்தின் அடுத்த ஷெட்யூலை கோவாவில் நடத்தி வருகிறது. இந்த படம் ஒரே நேரத்தில் 2டி மற்றும் 3டி தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
முதலில் படத்தின் சண்டை காட்சிகளை பிரம்மாண்டமாக எடுக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்திலிருந்து சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இவ்வாறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை யாரும் வெளியிடக்கூடாது என்றும் வெளியிட்டால் சட்டப்படி அவர்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று படக்குழுவினர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். சூர்யா 42 படத்தின் தயாரிப்பு குழு அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் இதுகுறித்து செய்தியினை வெளியிட்டுள்ளது. தயவு செய்து யாரும் சூர்யா42 படப்பிடிப்பு தளத்தின் எந்தவொரு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர வேண்டாம் என்கிற கேப்ஷனுடன் சில செய்திகளை தெரிவித்துள்ளது.
Please Don’t Share Any Shooting Spot Videos and Photos about #Suriya42 pic.twitter.com/idnGu4VXvz
— Studio Green (@StudioGreen2) September 25, 2022
அந்த செய்தியில் ‘அனைவருக்கும் ஒரு பணிவான வேண்டுகோள்! எங்களின் தயாரிப்பில் வரவிருக்கும் #சூர்யா42 படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து ஒரு சிலர் வீடியோக்கள் மற்றும் படங்களை இணையதள பக்கங்களில் பகிர்ந்ததை நாங்கள் கவனித்தோம். இந்த படத்தின் பணிகளில் படக்குழுவினர் ஒவ்வொருவரின் ரத்தமும், வியர்வையும் கலந்துள்ளது, அனைவருக்கும் இந்த திரைப்படத்தை ஒரு பிரமாண்டமான திரையரங்க அனுபவமாக பரிசளிக்க விரும்புகிறோம். இணையத்தில் வெளியிடப்பட்ட வீடியோக்கள் மற்றும் படங்களை நீங்கள் நீக்கினால் எங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும், இனிவரும் காலங்களில் இதுபோன்று எதையும் பகிர வேண்டாம் என்று நாங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம். அப்படி யாரேனும் செய்தால் அவர்கள் மீது ‘பதிப்புரிமை மீறல்’ என்கிற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளனர்.