ரஷ்ய நாட்டின் மாஸ்கோவில் இருந்து கிழக்கே 600 மைல் தொலைவில் உள்ள இஷெவ்ஸ்கில் என்ற இடத்தில் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று பள்ளியில் மர்ம உடை அணிந்து நுழைந்த நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதில், 7 குழந்தைகள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர்.
20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக சொல்லப்டுகிறது. மேலும், அந்த நபரும் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து சம்பவம் இடத்துக்கு போலீசாரும், மருத்துவ குழுவும் விரைந்து சென்று பள்ளியில் இருந்து அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றியதுடன், காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேல் சிகிச்சைக்காக அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இறந்த சடலங்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கோர சம்பவத்துக்கு புடின் இரங்கல் தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து மேல்மட்ட விசாரணை நடந்து வருகிறது. முதற்கட்ட விசாரணையில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டவர் நவ-பாசிசக் குழுவை சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. சமீப நாட்களில் ரஷ்யா பல பள்ளி துப்பாக்கிச் சூடு சம்பவங்களை சந்தித்துள்ளது.
மே 2021 இல், கசான் நகரில் ஒரு வாலிபர் ஏழு குழந்தைகளையும் இரண்டு பெரியவர்களையும் சுட்டு கொலை செய்தார். ஏப்ரல் 2022 இல், மத்திய உல்யனோவ்ஸ்க் பகுதியில் உள்ள மழலையர் பள்ளியில் இரண்டு குழந்தைகளையும் ஒரு ஆசிரியரையும் மர்ம நபர் சுட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை கொண்டார்.