பெங்களூரு: “காங்கிரஸ் கட்சியின் பல்வேறு அடுக்குகளில் ஊழல்கள் நிறைந்திருக்கும் நிலையில், அவர்கள் எனக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்” என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
மைசூரிவில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பசவராஜ் பொம்மை, “கர்நாடகாவில் காங்கிரஸ் வீழ்ச்சி அடைந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் பல்வேறு அடுக்குகளில் ஊழல்கள் நிறைந்திருக்கும் நிலையில், அவர்கள் எனக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு பிரசாரத்தைத் தொடங்கி உள்ளனர். காங்கிரஸ் தலைவர்கள் சுயநலவாதிகள். மாநிலத்தின் நலனை தியாகம் செய்யத் தயாராக இருக்கும் அவர்கள், மாநில அரசுக்கு களங்கம் ஏற்படுத்தி, அதன்மூலம் ஆட்சிக்கு வர முயற்சிக்கிறார்கள். சட்டசபையில் பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்த அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. எதிர்கட்சியினர் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், அதுகுறித்து விவாதிக்காமல், மலிவான பிரசாரங்களில் ஈடுபடுகின்றனர்” என்றார்.
தொடர்ந்து ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை கர்நாடாகவிற்கு வர இருக்கும் நிலையில் ‘பே சிஎம்’ பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த பசவராஜ் பொம்மை, “காங்கிரஸ் கட்சியினர் ‘பே சிஎம்’ பிரசாரத்தை தொடரட்டும். நாங்கள் அதை வரற்கிறோம். காங்கிரஸின் வீழ்ச்சி தொடங்கி விட்டது. அது என்ன ‘பே சிஎம்’? மக்கள் பார்த்திருக்கும் ஏராளமான பிரசாரங்களில் இதுவும் ஒன்று. இணையத்தில் எந்த செயலியின் மூலமும் இதுபோல ஒன்றை தொடங்க முடியும். குழந்தைக்கு கூட இது தெரியும். ராகுல் காந்தி கர்நாடகாவிற்கு வந்துவிட்டு போகட்டும். கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் ராகுல் காந்தி வந்து சென்ற இடங்களில் எல்லாம் தமரை மலர்ந்தது” என்று முதல்வர் பசவராஜ் தெரிவித்தார்.
முன்னதாக, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு, அரசின் திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஒப்பந்ததாரர்களிடம் 40 சதவீத கமிஷன் கேட்பதாக எழுத்த குற்றச்சாட்டுகளை முன்னிருத்தி அம்மாநில காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது. முந்தைய வாரம் 40 சதவீத கமிஷன் அரசு (40percentsarkara.com) என்ற பெயரில் இணையதளம் தொடங்கி பொதுமக்களிடம் புகார் மனுக்களை காங்கிரஸ் கட்சி கோரியது.
அதனைத் தொடர்ந்து கடந்த வாரத்தில், பேடிஎம் ஸ்கேனர் போன்று ‘பே சிஎம்’ எனும் தலைப்பில் முதல்வர் பசவராஜ் பொம்மையின் படத்துடன் போஸ்டரை வெளியிட்டது. இதில் பசவராஜ் பொம்மையின் படம் கியூஆர் கோட் வடிவில் இருந்தது. இதனை செல்போனில் ஸ்கேன் செய்தால் பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தொடங்கிய 40percentsarkara.com இணையதளத்துக்கு அது அழைத்துச் சென்றது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் காங்கிரஸ், பாஜகவினர் இடையே நாள்தோறும் வார்த்தை மோதல் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.