ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவி வழங்கக் கூடாது என்று காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வரும் அக்டோபர் 17-ம்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், கட்சி எம்.பி. சசி தரூர் உள்ளிட்டோர் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், கட்சித் தலைவராக தேர்வானாலும் முதல்வர் பதவியிலும் தொடர கெலாட் விரும்பினார். ஆனால், இதற்கு ராகுல் காந்தி மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதன்படி, அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சித் தலைவராக தேர்வானால் ராஜஸ்தான் முதல்வர் பதவியிலிருந்து விலகுவார் எனத் தெரிகிறது. முதல்வர் பதவியை சச்சின் பைலட்டுக்கு வழங்க ராகுல் காந்தி விரும்புவதாகக் கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் 25-ம் தேதி (நேற்று) மாலை 7 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் சச்சின் பைலட் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்படலாம் என தகவல் வெளியானது. இந்நிலையில், நேற்று மாலை அமைச்சர் சாந்திதரிவால் வீட்டில் அசோக் கெலாட்டின் ஆதரவு எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் 16 அமைச்சர்கள் உட்பட சுமார் 90-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. எனினும், இதில் அசோக் கெலாட் பங்கேற்கவில்லை.
இக்கூட்டத்தில், 2020-ம் ஆண்டு அரசுக்கு எதிராக 18 எம்எல்ஏ-க்களுடன் போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட்டுக்கு முதல்வர்பதவியை வழங்க எதிர்ப்பு தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, பைலட் போர்க்கொடி தூக்கியபோது கெலாட் தலைமையிலான அரசுக்குஆதரவாக இருந்த எம்எல்ஏக்களில் ஒருவரை முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, கெலாட் ஆதரவாளர்கள் என கருதப்படும் சுமார் 90-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் சட்டப்பேரவை சபாநாயகரை சந்தித்து பதவி விலகல் கடிதத்தை வழங்கியதாகக் கூறப்படுகிறது. சச்சின் பைலட்டை முதல்வராக்க கட்சித் தலைமை திட்டமிட்டதால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, கட்சியின் மேலிடப் பார்வையாளர்களான மல்லிகார்ஜுன கார்கே, அஜய்மக்கான் ஆகியோர் ஜெய்ப்பூர் சென்றிருந்தனர். அவர்கள் ஜெய்ப்பூரில் உள்ள அசோக் கெலாட் இல்லத்தில் காத்திருந்தனர். சில எம்எல்ஏக்கள் மட்டுமே அங்கு சென்றனர். பின்னர் கெலாட், பைலட் ஆகியோர் அங்கு சென்றனர். கெலாட் ஆதரவு எம்எல்ஏ.க்கள் வராததால் கூட்டம் நடைபெறவில்லை.