- ராஜஸ்தானில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பாஜக கோரியது
- சச்சின் பைலட்டை முதல் அமைச்சராக்க அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் கோரி வருகின்றனர்.
- ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை ஆதரிக்கும் எம்எல்ஏக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக ராஜிநாமா செய்யப் போவதாக எச்சரித்துள்ளனர்.
- உள்கட்சியில் நிலவும் பரபரப்புகளுக்கு மத்தியில் காங்கிரஸ் தலைவர்களின் உயர்நிலை கூட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை தொடர்ச்சியாக நடைபெற்றன.
- அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் தலைவர்களில் அசோக் கெலாட் முன்னணியில் உள்ளார். ஆனால் ஒருவருக்கு ஒரே பதவி என்ற கொள்கை காரணமாக அவர் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ய நேரிடும் என்ற நிலை உள்ளது.
- அசோக் கெலாட் முதல்வர் பதவியில் இருந்து விலகி காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுவாரா அல்லது போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யாமல் பின்வாங்குவாரா என்ற எதிர்பார்ப்பு காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் மேலோங்கியிருக்கிறது.
ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் நடக்கும் அதிகார போட்டி நாடகத்தில், முதல்வருக்கு எதிராகவே சொந்த கட்சி எம்எல்ஏக்கள் திரும்பி உள்ளதால், எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சி, அம்மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளது.
இந்த விவகாரத்தில் ராஜஸ்தானை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் பாஜக தலைவர் ராஜேந்திர ரத்தோர் ட்வீட் செய்துள்ளார். அதில் அவர், “ராஜஸ்தானின் நிலைமை குடியரசு தலைவர் ஆட்சியை நோக்கிச் செல்கிறது. முதல்வர் அசோக் கெலாட், ஏன் இப்படி நாடகமாடுகிறீர்கள்? அமைச்சரவையே ராஜிநாமா செய்த பிறகு ஏன் இன்னும் தாமதிக்கிறீர்கள்? நீங்களும் பதவி விலகுங்கள்,” என்று கூறியுள்ளார்.
ராஜஸ்தானில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், முதல்வர் பதவிக்கான காங்கிரஸ் உள்கட்சி பூசல் மீண்டும் தலைதூக்கியுள்ளது. சச்சின் பைலட்டை முதல்வராக்க வேண்டும் என்று அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
“இந்த விவகாரத்தில் முதல்வர் அசோக் கெலாட்டின் ஆதரவாளர்களில் பலர் சட்டமன்ற சபாநாயகர் டாக்டர். சிபி ஜோஷியின் இல்லத்தை அடைந்துள்ளனர்,” என்று ஜெய்பூரில் உள்ள பிபிசி செய்தியாளர் மொஹர்சின் மீனா கூறியுள்ளார்.
கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அவரே முதலமைச்சராக நீடிக்க வேண்டும் என்றும், அடுத்த சட்டமன்றத் தேர்தலை அவரது தலைமையிலேயே எதிர்கொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறார்கள்.
முன்னதாக, முதல்வர் அசோக் கெலாட் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் அஜய் மாக்கனை ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
- மகாராஜா ஹரி சிங்: தலித்துகளுக்கு கோவில் கதவுகளை திறந்த காஷ்மீரின் கடைசி மன்னர்
- மண்ணெண்ணெய் குண்டு சம்பவங்கள்: திருமாவளவன், சீமான் எழுப்பிய சந்தேகமும், ஐ.ஜி. எச்சரிக்கையும்
- தமிழ்நாட்டில் நடக்கும் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு சம்பவங்கள்: பயன்படுத்திக்கொள்ளுமா பாஜக?
சமீபத்திய நிலை என்ன?
சச்சின் பைலட் அடுத்த முதலமைச்சராக்கும் முயற்சி தொடர்பாக பல காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் எம்எல்ஏக்கள் தங்களுடைய பதவியை ராஜிநாமா செய்து அதற்கான கடிதங்களை அளித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை மாலையில் அமைச்சர் சாந்தி தரிவால் இல்லத்தில் நடைபெற்ற நீண்ட கூட்டத்திற்குப் பிறகு சபாநாயகர் சிபி ஜோஷியை அவரது வீட்டில் சந்தித்து கடிதங்களை எம்எல்ஏக்கள் அளித்தனர்.
ஜோஷியின் வீட்டிற்கு 90 எம்எல்ஏக்கள் சென்றதாக கூறப்படுகிறது. 200 உறுப்பினர்கள் பலம் கொண்ட அம்மாநில சட்டப்பேரவையில் காங்கிரஸுக்கு தற்போது 108 எம்எல்ஏக்கள் உள்ளனர். இருப்பினும், ராஜிநாமா கடிதங்கள் குறித்து சபாநாயகர் அலுவலகத்தில் இருந்து அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வரவில்லை. இந்த புதிய நெருக்கடியால், சச்சின் பைலட் இப்போது ராஜஸ்தானின் முதல்வராக பதவியேற்பது மிகவும் கடினமாக இருக்கும் என்று தெரிகிறது.இதற்கிடையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளர்கள் அஜய் மாக்கன் மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் அதிருப்தி எம்எல்ஏக்களை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இருவரும் திங்கட்கிழமை மாலையில் ஜெய்பூரில் இருந்து டெல்லி திரும்பியதும் நேரடியாக காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.
இதற்கிடையே, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சச்சின் பைலட், கமல் நாத் ஆகியோரையும் காங்கிரஸ் மேலிடம் திங்கள்கிழமை மாலையில் டெல்லிக்கு வரவழைத்துள்ளது. இவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகே கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும்.
முதல்வர் பதவி -என்ன சர்ச்சை?
இதேவேளை சச்சின் பைலட்டை முதல்வர் பதவிக்கு கட்சி மேலிடம் பரிசீலித்தால், தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி ராஜிநாமா செய்வோம் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர்.
சிபி ஜோஷி வீட்டுக்கு செல்லும் முன்பாக, ராஜஸ்தான் மாநில அமைச்சர் பிரதாப் சிங் கச்சாரியாவாஸ், “அனைத்து எம்எல்ஏக்களும் கோபமடைந்து ராஜிநாமா செய்யவுள்ளனர். அதனால்தான் சபாநாயகர் வீட்டிற்கு வந்துள்ளோம். முதல்வர் அசோக் கெலாட் எப்படி எங்களை ஆலோசனை செய்யாமல் இந்த முடிவை எடுத்தார் என்று எம்எல்ஏக்கள் விரக்தியடைந்துள்ளனர்,” என்று தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் 10-15 எம்.எல்.ஏ.க்களிடம் மட்டுமே அசோக் கெலாட் கருத்து கேட்டதாகவும் மற்றவர்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும் காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரதாப் சிங் கச்சாரியாவாஸ் கூறியதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
https://twitter.com/ANI/status/1574067176189067264
இதுபோன்ற முக்கிய விவகாரங்களில் கட்சித் தலைமை எங்கள் பேச்சைக் கேட்காமல் முடிவெடுக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக கச்சாரியாவாஸ் கூறுகையில், “கட்சித் தலைவராக அசோக் கெலாட் பதவியேற்ற பிறகு, ராஜஸ்தான் முதல்வர் யார் என்பது குறித்து ஆலோசிக்கப்படும். 102 எம்எல்ஏக்களில் யார் வேண்டுமானாலும் முதல்வராகலாம். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, அசோக் கெலாட் தான் அதை முடிவு செய்ய வேண்டும்,” என்றார்.
அசோக் கெலாட் பதில் என்ன?
அசோக் கெலாட் ஞாயிற்றுக்கிழமை முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வதாக சூசகமாக கூறினார். அவர் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக்கப்படலாம் என்ற ஊகங்களுக்கு மத்தியில் இந்த கருத்தை அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி தனக்கு நிறைய கொடுத்துள்ளது என்று கூறிய அவர், இதையும் தாண்டி ஒருவருக்கு வேறென்ன கிடைக்க வேண்டியுள்ளது? என்றும் கூறினார்.
https://twitter.com/ANI_MP_CG_RJ/status/1574006111770148864
மேலும் அசோக் கெலாட், “காங்கிரஸ் கட்சி இப்போது புதிய தலைமுறைக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என விரும்புகிறது. நாம் அனைவரும் சேர்ந்து நாட்டிற்கு தலைமைத்துவத்தை வழங்குவோம். நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக நாம் பாடுபட வேண்டும்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “நான் 50 ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டுள்ளேன். கடந்த 40 ஆண்டுகளாக ஏதோ ஒரு பதவியில் இருந்துள்ளேன். சில சமயம் எம்.பி., சில சமயம் மத்திய அமைச்சர், மூன்று முறை மாநில காங்கிரஸ் தலைவராகவும், மூன்று முறை முதல்வர் ஆகவும் இருந்துள்ளேன்,” என்று கூறினார்.
பாஜகவின் எதிர்வினை
இந்த நிலையில், “காங்கிரசின் அரசியல் கபட நாடகத்தால் மாநிலத்தின் வளர்ச்சி ஸ்தம்பித்துள்ளது, இந்த மோசடிக்கு 2023ல் ராஜஸ்தான் மக்கள் பதில் சொல்வார்கள்,” என்று ராஜஸ்தான் பாஜக மாநில தலைவர் சதீஷ் பூனியா கூறியுள்ளார்.
https://www.youtube.com/watch?v=ViogbM91irM
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்