“ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்திக்க தயாரா?"- முற்றும் பாஜக – என்.ஆர்.காங்கிரஸ் மோதல்!

புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணியில் மோதல் முற்றியுள்ள நிலையில், “பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு  மீண்டும் தேர்தலை சந்திக்க தயாரா?” என அரசு கொறடா ஆறுமுகம் கேள்வி எழுப்பியுள்ள வீடியோ, புதுச்சேரி அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக  கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமி பதவி வகித்து வருகிறார். இந்த கூட்டணி அமைந்ததிலிருந்தே பாஜகவினர் முதல்வர் ரங்கசாமிக்கு பல்வேறு வகையில் நெருக்கடி கொடுக்கப்படுவதாகவும் விமர்சிக்கப்பட்டது.
image
மேலும், துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மூலம் முதல்வர் ரங்கசாமியின் அதிகாரத்தை பறித்து அவரை தன்னிச்சையாக செயல்படவிடாமல் தடுப்பது – அரசு விழாக்களில் முதல்வர் ரங்கசாமியை புறக்கணிப்பது போன்ற செயல்கள் நடைபெறுகிறது என திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளே முதல்வர் ரங்கசாமிக்கு ஆதரவாக குரல்கொடுத்து வருகின்றனர். மற்றொருபக்கம் கூட்டணிக்குள் இருந்து கொண்டே முதல்வர் ரங்கசாமியை விமர்சிப்பது என தொடர்ந்து பாஜக மற்றும் பாஜக ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதால் தனது தொகுதி புறக்கணிப்படுவதாக கூறி திருபுவனை தொகுதி பாஜக ஆதரவு சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் அங்களான் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் முதல்வர் ரங்கசாமியை மாற்றக்கோரி டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து புகார் தெரிவிக்க உள்ளதாகவும் அவர் கூறினார். இந்த விவகாரம் ஆளுநர் மாளிகை வரை சென்று சமரசம் செய்யப்பட்டது. இதேபோல் பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட சிலரும் முதல்வர் ரங்கசாமி மீது தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
image
இதனிடையே கூட்டணியில் இருந்துகொண்டே  பாஜக மற்றும் பாஜக ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி மீது புகார் கூறி வருவது என்.ஆர்.காங்கிரஸார் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் தனியாக இன்று ஆலோசனை கூட்டம் நடத்திவிட்டு, சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் முதல்வரை சந்தித்த அவர்கள், கூட்டணியில் இருந்துக்கொண்டே பாஜகவினர் விமர்சனம் செய்வதை முதல்வர் கண்டிக்க வேண்டுமென வலியுறுத்தினர்.
அப்போது அரசு கொறடாவும், இந்திரா நகர் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினருமான ஆறுமுகம், “பாஜகவினர் யாருடைய தயவால் ஜெயித்தார்கள் என்று மக்களுக்கு தெரியும். வேண்டுமென்றால் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு  மீண்டும் தேர்தலை சந்திக்க தயாரா?” என முதல்வர் ரங்கசாமி முன்னிலையிலேயே கேள்வி எழுப்பினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.