முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கிலிருந்து குற்றவாளிகள் நளினி, ரவிச்சந்திரன் இருவரையும் விடுதலை செய்யக்கோரி தொடர்ந்த வழக்கில் மத்திய மற்றும் தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றவாளிகளான 7 பேரில் ஒருவரான பேரறிவாளன் கடந்த மே மாதம் 18ஆம் தேதி உச்சநீதிமன்றத்தால் தன்னுடைய சட்டப்பிரிவு 142 சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்யப்பட்டார். இவ்விடுதலையைத் தொடர்ந்து இவ்வழக்கில் குற்றவாளிகள் நளினி உள்ளிட்ட மற்ற 6 பேரும் விடுதலை கோர சட்ட வழிவகை ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் குற்றவாளிகளில் இருவரான நளினி மற்றும் ரவிச்சந்திரன் இருவரும் தனித்தனியே உச்ச நீதிமன்றத்தில் விடுதலை கோரி மனு தாக்கல் செய்தனர். அதில், ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன் நன்னடத்தை, பரோல் மூலம் வெளியே வந்த போதில் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடந்து கொண்டார் என்பதையெல்லாம் நீதிமன்றம் மேற்கோள் காட்டியது போல, தாங்களும் அதே நிலையில் உள்ளதாகவும் தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். குறிப்பாக இந்த வழக்கில் தங்களை விடுதலை செய்யும் வரை தங்களுக்கு இடைக்காலமாக ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் மனுவில் நளினி மற்றும் ரவிச்சந்திரன் இருவரும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு இன்றைய தினம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர் கவாய் மற்றும் நாகரத்னா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் நிலைப்பாட்டை அறிய வேண்டி உள்ளதால் இரு அரசுகளும் இவ்வழக்கில் பதில் அளிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டு நோட்டீஸ் பிறப்பித்தனர். வழக்கு அக்டோபர் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM