ராணுவ வீரர்கள் முகாமிற்குள் புகுந்த காட்டு யானை ஒன்று அவர்களுடன் சேர்ந்து கால்பந்து விளையாடி அங்கிருந்தவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
அசாம் மாநில கவுகாத்தியில் ராணுவ முகாம் உள்ளது. காட்டுப்பகுதியான அங்கு வனவிலங்குகளின் நடமாட்டம் சற்று அதிகமாகவே இருக்கும். அதிகமாக பகிரப்பட்டு வரும் அந்த வீடியோவில், கால்பந்து விளையாட தீர்மானிப்பதற்கு முன்பு யானை முதலில் சாலையை கடந்துவருகிறது. அதை பார்த்த வீரர்கள் உடனடியாக யானையிடமிருந்து சற்று விலகி நிற்கின்றனர்.
விளையாட்டு மைதானத்துக்குள் வரும் முன் தன்மீது புழுதியை அள்ளி தூவிக்கொண்டு உள்ளே வரும் யானைக்கு யாரோ ஒருவர் பந்தை வீசுகிறார். அதுவும் லாவகமாக தனது பின்னங்காலால் பந்தை பதிலுக்கு உதைத்து விளையாடுகிறது. பின்னர் மைதானத்திலிருந்து வெளியே சென்ற யானை தனது தும்பிக்கையை உயர்த்தி குட்- பை சொல்லிவிட்டு செல்கிறது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வைரலாகி வருகிறது.
அந்த யானை அம்ஜான் காட்டுப்பகுதியிலிருந்து உணவுதேடி வந்திருக்கலாம் என்கின்றனர் உள்ளூர்வாசிகள். அசாமில் நிறைய யானைகள் வசித்துவருகின்றன. அங்கு அடிக்கடி சாலையோரங்களில் யானைகளை பார்க்கமுடியும்.
Courtesy – NDTVSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM