இந்திய பங்கு சந்தைகள் கடந்த வார சரிவினைக் தொடர்ந்து இன்றும் சரிவிலேயே காணப்படுகிறது. குறிப்பாக சென்செக்ஸ் 1.64% அல்லது 953.70 புள்ளிகள் குறைந்து, 57,145.22 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. இதே நிஃப்டி 1.72% அல்லது 311.05 புள்ளிகள் குறைந்து, 17,016. 30 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.
இது முன்னதாக சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேலாக வீழ்ச்சி கண்டும், நிஃப்டி மீண்டும் 17,000 புள்ளிகளுக்கு கீழாக வீழ்ச்சி கண்டும் காணப்பட்டது.
இந்த பலத்த வீழ்ச்சிக்கு மத்தியில் முதலீட்டாளர்கள் பெரும் இழப்பினை கண்டுள்ளனர்.
அக்டோபர் 1 முதல் வரவிருக்கும் 5 முக்கிய மாற்றங்கள்.. யாருக்கு என்ன பலன்?
ரூ.7 லட்சம் கோடி இழப்பு
குறிப்பாக பி எஸ் இ-யில் பட்டியலிடப்பட்ட பங்குகளின் சந்தை மதிப்பானது சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் குறைந்து, 269.86 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. சர்வதேச அளவில் மந்த நிலை இருந்து வரும் நிலையில், மேற்கொண்டு பல நாடுகளில் ரெசசன் அச்சம் இருந்து வருகின்றது. இதன் காரணமாக மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக இந்திய சந்தையில் இருந்து முதலீடுகள் வெளியேறி வருகின்றன.
ரூ.13 லட்சம் கோடி அவுட்
கடந்த 4 அமர்வுகளாகவே தொடர்ந்து இந்திய சந்தையானது சரிவிலேயே காணப்படுகின்றது. இதனால் முதலீட்டாளர்களுக்கு 13 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. செப்டம்பர் 20 அன்று 283 லட்சம் கோடி ரூபாயாக இருந்த பிஎஸ்இ நிறுவனங்களின் சந்தை மதிப்பு, இன்று 269.86 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.
பத்திர சந்தை
அமெரிக்க பத்திர சந்தையானது தொடர்ந்து உச்சம் எட்டி வருகின்றது. இந்திய பத்திர சந்தையும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. குறிப்பாக 2 வருட பத்திர சந்தையானது 3 வருட உச்சத்தில் காணப்படுகின்றது. இதே 10 வருட சந்தையும் 7% மேலாக காணப்படுகிறது.
ஃபெடரல் ரிசர்வ் வங்கி
அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி 75 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ள நிலையில், அடுத்த 2 கூட்டத்தில் வட்டி விகிதம் 125 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் பொருளாதாரம் இன்னும் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு சந்தையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.
டாலர் மதிப்பு
அமெரிக்க டாலரின் மதிப்பானது பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சம் எட்டி வரும் நிலையில், இது மேற்கொண்டு 114 ஐ எட்டலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். இது ரூபாயின் மதிப்பில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ரூபாயின் மதிப்பானது இன்று இதுவரையில் இல்லாத அளவுக்கு 81.55 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது. ரூபாய் சரிவானது அன்னிய முதலீட்டாளர்களை இந்திய சந்தையில் இருந்து விலக்கி வைக்கலாம்.
சர்வதேச பங்கு சந்தைகள்
சர்வதேச சந்தைகள் பலவும் சரிவில் காணப்படுகின்றன. குறிப்பாக டவ் ஜோன்ஸ் நவம்பர் 2020-க்கு கடந்த அமர்வில் மோசமான சரிவினைக் கண்டுள்ளது. இதே எஸ் & பி 500 இன்டெக்ஸ் 4.6% சரிவிலும், நாஸ்டாக் 5.1% சர்விலும், கோல்டுமேன் சாச்சஸ் எஸ் &பி 500ஐ 4300 புள்ளிகளில் இருந்து 3600 புள்ளிகளாக இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இது கடந்த ஜூன் மாத குறைந்த லெவலை காட்டிலும் குறைவாகும்.
அன்னிய முதலீடுகள்
தொடர்ந்து சர்வதேச சந்தையில் நிலவி வரும் பல்வேறு காரணிகளுக்கு மத்தியில், அன்னிய முதலீடுகள் வெளியேற்றம் கண்டு வருகின்றன;. குறிப்பாக இந்திய சந்தையில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமையன்று 2900 கோடி ரூபாய் மதிப்பிலான ஈக்விட்டி பங்குகளை அன்னிய முதலீட்டாளர்கள் விற்று வெளியேறியுள்ளனர்.
ரெசசன் அச்சம்
அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் ரெசசன் அச்சம் நிலவி வருகின்றது. எனினும் இந்தியாவில் கடன் வளர்ச்சி, வரி வசூல் உள்ளிட்ட சாதகமான காரணிகள் இந்தியா அந்தளவுக்கு பின்னடைவை சந்திக்கவில்லை என்பதை சுட்டிக் காட்டுகின்றன. ஆக தற்போதைக்கு தடுமாற்றம் இருந்தாலும், மீண்டும் ஏற்றத்திற்கு சந்தைகள் திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உஷாரா இருங்க
எனினும் இந்த வாரத்தில் எஃப் & ஓ எக்ஸ்பெய்ரியும் இருப்பதால் சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக அது வரையில் முதலீட்டாளர்கள் நிதானமாக இருக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Investors lose Rs 7 lakh crore in Indian stock market crash: Why?
Investors lose Rs 7 lakh crore in Indian stock market crash: Why?/ரூ. 7 லட்சம் கோடியை பறிகொடுத்த முதலீட்டாளர்கள்.. உஷாரா இருங்க!