வால்பாறை : வால்பாறை அருகே பயிற்சியின்போது, வேட்டை பல் இழந்த புலிக்கு அறுவை சிகிச்சைக்கு பின், மருத்துவர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் புலி பல்வேறு போஸ்களை கொடுத்து அசத்தி வருகிறது. கோவை மாவட்டம், வால்பாறை அடுத்து உள்ள முடீஸ் எஸ்டேட் பஜார் பகுதியில் 2 வயதான, உடல் மெலிந்து காணப்பட்ட புலிக்குட்டியை, பொதுமக்கள் புகாரின் பேரில் வனத்துறையினர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மீட்டனர். இதைத்தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆலோசனையின்படி புலிக்குட்டிக்கு மானாம்பள்ளி வனத்துறை தங்கும் விடுதியில், கூண்டில் அடைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
புலியை வனப்பகுதியில் விடுவிக்க வேட்டை பயிற்சி அளிக்க வேண்டும் என வனத்துறை உயர் அதிகாரிகள் திட்டமிட்டனர். இருப்பினும் பல்வேறு அதிகாரிகள் வேட்டை பயிற்சி தவறு எனவும், வண்டலூர் அனுப்பிவிடலாம் எனவும் கருத்து கூறினர். இந்நிலையில் வேட்டை பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டு, 10 ஆயிரம் சதுர அடியில், இந்தியாவில் முதல் முறையாக இயற்கையான சூழலில், மானாம்பள்ளி வனச்சரகத்தில், பரம்பிக்குளம் அணை கரையோரம், பிரமாண்ட கூண்டு ரூ.75 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு, அப்பணிகள் முடிந்தது.
கடந்த ஜூன் 5ம் தேதி வேட்டை பயிற்சி அளிக்க பிரமாண்ட கூண்டில் விடப்பட்டது. வேட்டை பயிற்சியில் மேல்தாடை வேட்டை பல் ஒன்று உடைந்துவிட்டதாக கூறப்பட்டது. எனவே சாப்பிடமுடியாமல், அடிக்கடி புலி நோய்வாய்பட்டு வந்தது. எனவே உடைந்த பல்லில் ஏற்பட்டுள்ள தொற்றையும், எஞ்சிய பல்லையும் அகற்ற கடந்த 19ம் தேதி, நவீன கருவிகளுடன் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. எக்ஸ்ரே கருவிகள், குளுக்கோஸ் என வெளிநாட்டு பாணியில் புலிக்கு தமிழக மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
வண்டலூர் வன உயிரியல் பூங்கா டாக்டர் ஸ்ரீதர் தலைமையில் 5க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். இதையடுத்து புலி உடல் நலம் தேறி வருவதாக வனத்துறை வட்டாரத்தில் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது வனத்துறையினர், கூண்டில் புலிக்குட்டி ஒற்றை வேட்டை பல்லுடன் காட்சி அளிக்கும் பல்வேறு ‘கெட் அப்’ புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
அதன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், எக்ஸ்ரே மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் மீண்டும் பிரமாண்ட கூண்டிற்கு புலிக்குட்டி மாற்றப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.