வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் ‘வாரிசு’ படத்தின் பணிகளில் நடிகர் விஜய் தற்போது முழு கவனம் செலுத்தி வருகிறார். தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ரஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், பிரபு, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, யோகி பாபு, சங்கீதா கிரிஷ் மற்றும் சம்யுக்தா போன்ற பலர் நடித்து வருகின்றனர். வாரிசு படம் பற்றிய அப்டேட்டுகள் அடிக்கடி வந்தாலும் ரசிகர்கள் பலரும் எதிர்பார்ப்பது என்னவோ ‘தளபதி 67’தான். லோகேஷ் இயக்கத்தில் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 67’ படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உள்ளது, அதேசமயம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மென்மேலும் தூண்டிவிடும் வகையில் இப்படம் குறித்த தகவல்கள் பல அடுக்கடுக்காக வெளியாகிக்கொண்டே இருக்கிறது.
அதன்படி, இப்படத்தில் மொத்தம் ஆறு வில்லன்கள் இருப்பதாக ஏற்கனவே சில தகவல்கள் வெளியானது. வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பிரித்விராஜ் சுகுமாரன், சஞ்சய் தத் மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி இயக்குநர் கௌதம் மேனனும் படத்தில் நடிக்கலாம் என கூறப்படுகிறது.இதுதொடர்பான தகவலையு8ம் கௌதம் சமீபத்தில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து இரண்டு படங்கள் ஹிட் கொடுத்திருப்பதால் விஜய்யுடன் லோகேஷ் இணையும் படத்திற்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்தப் படம் குறித்த புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது படத்தின் திரையரங்க வெளியீட்டிற்கு பிறகான ஓடிடி உரிமத்தை கைப்பற்ற நெட்ஃப்ளிக்ஸ் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளதாம். படத்துக்கு அந்த நிறுவனம், 125 கோடி ரூபாய்வரை கொடுப்பதற்கு தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல் படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்ற சோனி நிறுவனம் முண்டியடிப்பதாகவும், 14 கோடி ரூபாய்வரை தருவதற்கு அந்நிறுவனம் தயார் எனவும் கோலிவுட்டில் பேச்சு எழுந்திருக்கிறது. படத்தின் ஷூட்டிங்கே இன்னும் ஆரம்பிக்கப்படாத சூழலில் விஜய் – லோகேஷ் படத்துக்கான வியாபாரம் இவ்வளவு நடப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.