திருவனந்தபுரம்: கேரளத்தில் ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசு ரூ.25 கோடி வென்ற ஆட்டோ ஓட்டுநர் அனூப் தனக்கு நிம்மதி இல்லை என புலம்பித் தீர்த்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கேரள மாநிலத்தில் தினசரி லாட்டரி சீட்டை மாநில அரசு நடத்தி வருகிறது. இதன் அதிகபட்ச பரிசுத்தொகை ரூ.90 லட்சமாகும். இந்நிலையில் கேரளத்தில் மலையாளிகளின் முக்கியப் பண்டிகையான ஓணத்தை முன்னிட்டு பம்பர் பரிசுச் சீட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு இதன் பரிசுத் தொகை ரூ.25 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த பரிசுத் தொகை திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அனூப் என்ற ஆட்டோ ஓட்டுநருக்கு விழுந்தது.
இதுகுறித்து அப்போது அனூப் கூறியதாவது: எனக்குப் பரிசு கிடைக்கும் என நான் நினைக்கவே இல்லை. வழக்கம் போலத்தான் இந்த லாட்டரி சீட்டை வாங்கினேன். பணத்தை என்ன செய்வது என்று இன்னும் முடிவு எடுக்கவில்லை. 19-ம் தேதி இந்த லாட்டரியின் குலுக்கல் நடந்தது. குலுக்கலுக்கு முந்தைய நாள்தான் இந்த சீட்டை வாங்கினேன். 500 ரூபாய் லாட்டரி சீட்டுக்கு பணம் இல்லாததால் என் மகனின் உண்டியலில் இருந்துதான் பணம் எடுத்தேன். இவ்வாறு அவர் கூறினார். வங்கியில் 3 லட்ச ரூபாய் கடனுக்கு விண்ணப்பித்திருந்த அனூப் அதை வேண்டாம் எனச் சொல்லி விட்டதாக கூறியிருந்தார்.
ஆனால் இப்போது மிகவும் வருத்தத்துடன் வீடியோ ஒன்றை அனூப் தனது முகநூலில் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியது: என்னையும், என் குடும்பத்தையும் நிம்மதியாக வாழ விடுங்கள். நான் இப்போது வீட்டில் கூட இருப்பது இல்லை. என் உறவினர்கள் வீட்டில் மாறி, மாறி இருக்கிறேன். இப்போது கூட ஒரு அக்காவின் வீட்டில்தான் இருக்கிறேன். ஆனாலும் கண்டு பிடித்து வந்து விடுகிறார்கள். உதவி கேட்டு தினமும் பலர் வீட்டுக்கு வருகிறார்கள். இன்னும் என் கைக்கு பணம் வரவில்லை என தெளிவாகச் சொன்னாலும், உதவி கேட்டு வந்து தொந்தரவு செய்கிறார்கள். அப்படி வருபவர்களுக்கு உதவி செய்ய மறுத்தால் திட்டிவிட்டுச் செல்கிறார்கள். வரி பற்றியெல்லாம் தெரியாத சாமானியன் நான். என் கைக்கு இன்னும் பணமே வந்து சேரவில்லை. அதற்குள் நோகடிக்கிறார்கள். உதவி கேட்டு வரும் அனைவருக்கும் எப்படி என்னால் உதவ முடியும்?
உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் என் மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக்கூட என்னால் முடியவில்லை. இந்த தொந்தரவினால் இரவில் தூங்க மட்டுமே வீட்டுக்கு வருகிறேன். ஒருவேளை மூன்றாவது பரிசு கிடைத்திருந்தால் நிம்மதியாக இருந்திருக்கலாம். முதல் பரிசு கிடைத்ததால் என் நிம்மதியே போய்விட்டது. அந்தப் பணத்தை பொருளாதார நிபுணர்களின் ஆலோசனையுடன் நிரந்தர வைப்புத் தொகையாக செலுத்த உள்ளேன். இவ்வாறு அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
ஓணம் பம்பர் லாட்டரியின் முதல் பரிசு ரூ.25 கோடி என்றாலும், அதில் வரி பிடித்தம் போக ரூ.15.75 கோடி மட்டுமே கிடைக்கும்.