வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில், ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி ( IRCTC ) போர்ட்டலிலிருந்து உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் விரைவாக முன்பதிவுசெய்யப்பட்டு, கூடுதல் தொகைக்கு விற்பனைச் செய்யப்படுவதாக பாதுகாப்புப் படை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட தீவிர சோதனையில், சட்டவிரோத மென்பொருளைப் ( Software ) பயன்படுத்தி வந்த 2 கடைகள் சிக்கின. விசாரணையில், பீகார் மாநிலம், தானாபூர் பகுதியைச் சேர்ந்த சைலேஷ் யாதவ் என்ற 27 வயதாகும் இளைஞர், அந்த சட்டவிரோத மென்பொருளை உருவாக்கி விற்பனைச் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, விழுப்புரம் ரயில்வே இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை போலீஸார், பீகார் மாநிலத்துக்கு விரைந்துச் சென்று, அந்த இளைஞரைக் கைதுசெய்து, அழைத்து வந்தனர்.
விசாரணையில் அந்த நபர், தன்னால் உருவாக்கப்பட்ட சட்டவிரோத மென்பொருளை நாடு முழுவதும் 3,484 பேரிடம் இரண்டாயிரம் ரூபாயிலிருந்து 3,500 ரூபாய் வரை விற்பனைச் செய்திருப்பது தெரியவந்தது. மென்பொருள் விற்பனை மூலம் கடந்த 18 மாதங்களில் மட்டும் ரூ.98 லட்சம் அவருக்குக் கிடைத்திருக்கிறது. அதோடு, நாளொன்றுக்கு 7 ஆயிரம் டிக்கெட்டுகளை முன்பதிவுசெய்திருக்கிறார். அதன்படி, இதுவரை 1,25,460 டிக்கெட்டுகளை முன்பதிவுசெய்திருக்கிறார். பீகார் இளைஞரின், இந்த சாஃப்ட்வேர் ஹேக்கிங் மோசடியின் மூலம் எடுக்கப்பட்ட டிக்கெட்டுகளின் மதிப்பு சுமார் ரூ.56.45 கோடி என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. கைதுசெய்யப்பட்ட அந்த இளைஞர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும், திருச்சி மண்டல ரயில்வே போலீஸாரும் அவரை கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தவிருப்பதாகவும், மேலும் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகலாம் என்றும் போலீஸார் தெரிவித்திருக்கிறார்கள்.