திருவனந்தபுரம்: ‘‘கேரளாவில் 12 மணி நேர ‘பந்த்’ நடத்திய போது, முகமூடி அணிந்த பிஎஃப்ஐ நிர்வாகிகள் கொரில்லா தாக்குதல் நடத்தினர்’’ என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.
தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்தது, தீவிரவாத அமைப்புகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்து அனுப்புவது போன்ற குற்றச்சாட்டின் கீழ் நாடு முழுவதும் 15 மாநிலங்களில் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பினர் அலுவலகங்கள், அதன் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கடந்த சில நாட்களுக்கு முன்னர் சோதனை நடத்தியது. இதை கண்டித்து தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பிஎஃஐ அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
கேரளாவில் கைது செய்யப்பட்ட 13 பிஎஃப்ஐ நிர்வாகிகளில் 11 பேரிடம் 30-ம் தேதி வரை விசாரணை நடத்த என்ஐஏ.வுக்கு கொச்சி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதற்கிடையில், கேரளாவில் 12 மணி நேர ‘பந்த்’ நடத்த பிஎஃப்ஐ அழைப்பு விடுத்தது. அப்போது, கடைகளை திறந்து வைத்த வியாபாரிகளை அந்த அமைப்பினர் மிரட்டினர். பல இடங்களில் வாகனங்கள் எரிக்கப்பட்டன. அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. தமிழகத்திலும் கோவையின் பல இடங்களில் பாஜக.வினர் வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.
இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று கூறும்போது, ‘‘கேரளாவில் கடந்த வெள்ளிக்கிழமை 12 மணி நேர பந்த் நடத்த அழைப்பு விடுத்து, முகமூடி அணிந்த பிஎஃப்ஐ அமைப்பினர் கொரில்லா தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் ஈடுபட்ட யாரும் தப்ப முடியாது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.
அதேபோல் தமிழக தலைமை செயலர் இறையன்பு நேற்று உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, கோவையில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து அவர் விரிவாக ஆலோசித்தார். இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘‘கோவையில் தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. எனினும், சில இடங்களில் பதற்றமான சூழ்நிலை உள்ளது. பெட்ரோல் குண்டு வீச்சு உட்பட வன்முறைகளில் ஈடுபட்டவர்களை, சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பதற்றமான இடங்களில் கூடுதல் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்’’ என்றனர்.
இந்நிலையில், உத்தர பிரதேசத் தில் தீவிரவாத தடுப்பு படையினர் (ஏடிஎஸ்) வாரணாசி, மீரட்டில் நேற்று பிஎஃப்ஐ அமைப்பை சேர்ந்த 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.