திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே, மின் கசிவு காரணமாக வீட்டில் தீப்பற்றியதில், டாக்டர் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உடல் கருகி பலியாகினர். ஆந்திராவின் திருப்பதி அருகேயுள்ள ரேணிகுன்டாவில் வசிப்பவர் டாக்டர் ரவிசங்கர் ரெட்டி, ௪௯. இவரது மனைவியும் டாக்டர். இவர்கள், மூன்று மாடி குடியிருப்பின் தரை தளத்தில் மருத்துவமனை நடத்தினர்.
இரண்டாவது தளத்தில், தங்களின் ௧௧ வயது மகள், ௭ வயது மகன் மற்றும் ரவிசங்கரின் மாமியார் ஆகியோர் வசித்து வந்தனர். நேற்று அதிகாலை, குடியிருப்பின் முதல் தளத்தில் மின் கசிவு காரணமாக தீப்பிடித்து கரும்புகை பரவியது. இதனால் பயந்துபோன இரண்டாவது தளத்தில் இருந்த டாக்டரின் குழந்தைகள் இருவரும், குளியலறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டனர். அதற்குள் தீ மளமளவென இரண்டாவது தளத்துக்கும் பரவியது. அப்போது, சமையல் காஸ் கசிவால், தீ பயங்கரமாக பற்றி எரிந்தது. தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தீயை அணைத்தனர்.
இரண்டாவது தளத்தில் இருந்து, டாக்டர் ரவிசங்கரின் கருகிய உடலையும், குளியலறைக்குள் புகையால் மூச்சுத் திணறி உயிரிழந்த குழந்தைகளின் உடல்களையும் மீட்டனர்.தீ விபத்து நடந்தபோது, ரவிசங்கரின் மனைவி மற்றும் மாமியார் வீட்டில் இல்லாததால், அவர்கள் உயிர் தப்பினர். இது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement