2024 இல் மத்தியில் எந்த மாடல் ஆட்சி? -ஸ்டாலின் நச் பதில்!

பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பில் ‘தெற்கிலிருந்து இந்தியா பெற்ற பாடங்கள்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம், சென்னை, கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் இன்று நடைபெற்றது.’தி டவுன் ஹால்’ என்ற தலைப்பிலான இந்த கருத்தரங்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது:

‘வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது’ என அண்ணா சொன்ன ஒரு காலம் இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலை மாறியுள்ளது. பல நூறு ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உரிமையை பெற்று தருவதே சமூகநீதியின் முதன்மையான குறிக்கோள்.

வகுப்புவாரி பிரதிநிதித்துவம், பெண்களுக்கு வாக்கு உரிமை மற்றும் சொத்துரிமை, இலவச பேருந்து வசதி, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு, பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு திட்டம் போன்ற பல திட்டங்கள் தமிழ்நாட்டில் இருந்துதான் தொடங்கப்பட்டன.

வளர்ச்சியை குறிப்பிடும் பல்வேறு குறியீடுகளில் தேசிய அளவில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. தனிநபர் வருமானம், தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்கள், பணவீக்கம் குறைவு, பட்டினி சாவு இல்லா மாநிலம் என பல குறியீடுகளில் தமிழ்நாடு சிறப்பானதாக திகழ்கிறது.

ஏற்றுமதியை கணக்கிட்டு செயல்படுவது வேறு மாடல்; ஆனால் மக்கள் ஏற்றத்தை கணக்கிட்டு இயங்குவதுதான் திராவிட மாடல். அனைத்து மாநிலங்களுக்கு திராவிட மாடல் சிந்தனை மேலோங்க வேண்டும் என்று ஸ்டாலின் பேசினார்.

2024 இல் மத்தியில் ஸ்டாலின் மாடல் ஆட்சி வருமா என்று நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விக்கு, “வரும் என்ற அந்த நம்பிக்கையில்தான் நாங்கள் பணியாற்றி கொண்டிருக்கிறோம்” என முதல்வர் ஸ்டாலின் புன்னகையுடன் பதிலளித்தார்.

குஜராத் மாடல், டெல்லி மாடல், திராவிட மாடல் என, பவ்வேறு மாநிலங்களில் பல மாடல்களி்ன் ஆட்சி நடைபெற்றுவரும் நிலையில், 2024 இல் மத்தியில் ‘ஸ்டாலின் மாடல் ஆட்சி’ வரும் என்று முதல்வர் நம்பிக்கை தெரிவித்துள்ளதன் மூலம், எதிர்வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் மத்தியில் காங்கிரஸ், பாஜக யார் ஆட்சி அமைத்தாலும் அதில் திமுக பங்கு முக்கியமானதாக இருக்கும் என்பதைதான் அவர் சூசகமாக கூறியுள்ளதாக, அரசியல் அரங்கில் புரிந்து கொள்ளப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.