தமிழகத்தின் 23 மாவட்டங்களில், இன்று முதல் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழகப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று (செப்.26-ம் தேதி) முதல் 29-ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருப்பத்தூர் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று (26-ம் தேதி) முதல் 29-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்’ என்று கூறப்பட்டுள்ளது.