‘திருச்சியில் ‘டைப்பஸ்’ என்கிற புதுவகை காய்ச்சல் பரவி வருவதாகவும், ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை அளிக்காவிட்டால் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் என்றும் திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் நேரு எச்சரித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் காய்ச்சல் காரணமாக குழந்தைகள், பெரியவர்கள் என தினமும் 70 பேர் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். அனைவரும் வெளிப்புற நோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். அதே நேரத்தில் 50 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் ‘டைப்பஸ்’ நோயின் அறிகுறிகளைக் கொண்ட, 73 பேருக்கு எலிசா சோதனை மேற்கொண்டதில், 5 பேருக்கு நோய் உறுதிப் படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார்.
காய்ச்சல், தலைவலி, உடல்சோர்வு ஆகியவை ‘டைப்பஸ்’ என்ற இந்த நோயின் அறிகுறிகள். மேலும் உடலின் மறைவிடங்களில் தடுப்புகள், கொப்புளங்களும் ஏற்படும். செல்லப்பிராணிகளின் மேல் வளரும் ஒட்டுண்ணியால் எளிதாக பரவும்.
மண் சார்ந்த வேலை பார்ப்பவர்களுக்கு மண்ணில் உள்ள ஒட்டுண்ணிகள் மூலம் இந்த காய்ச்சல் ஏற்படும். செல்லப்பிராணிகளை அதிகம் கொஞ்சுவது, அதிக நேரம் மண்ணில் வேலை பார்ப்பவர்களுக்கு இந்த காய்ச்சல் வர அதிக வாய்ப்பிருக்கிறது.
இந்த நோய் அறிகுறிகள் கண்ட நோயாளிகள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவர்களை அணுகி உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். மெடிக்கல்லில் நேரடியாக மருந்துகள் வாங்கி உட்கொள்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
ஆரம்பகட்டத்திலேயே இந்நோயை கண்டறிந்தால் உடனடியாக குணப்படுத்தி விடலாம். அதற்குரிய மருந்துகள் கைவசம் உள்ளன. அலட்சியமாக இருந்தால் உயிருக்கே ஆபத்தை விளைவித்து விடும் என்று திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் நேரு கூறியுள்ளார்.
newstm.in