புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான கமல்நாத், காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் அவரது இல்லத்தில் கமல்நாத் சந்தித்தார். இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் அவரும் போட்டியிடலாம் என்று கூறப்பட்டது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக “காங்கிரஸ் தலைமை பதவிக்கு போட்டியிட எனக்கு விருப்பம் இல்லை. நான் நவராத்திரி விழாவுக்காகவே டெல்லி வந்தேன்” என்று கூறி ஊகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அதேநேரத்தில் ராஜஸ்தான் காங்கிரஸில் நிலவும் சூழலை சரிசெய்வதற்கு ஒரு மத்தியஸ்தராக செயல்பட்டு கமல்நாத் உதவி செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் மாதம் 17-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இந்த மாதம் 30 ம் தேதி நிறைவடைகிறது. தேர்தல் முடிவுகள் அக்.19ம் தேதி அறிவிக்கப்படும்.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் அக்கட்சியின் ஜி23 குழு உறுப்பினர்களில் ஒருவரும், திருவனந்தபுரம் எம்.பியுமான சசி தரூர், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர் போட்டியிட இருகின்றனர். இந்த தேர்தலில் அஷோக் கெலாட் வெற்றி பெற்று காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில், “ஒருவருக்கு ஒரு பதவி” என்ற கட்சி கொள்கையின் படி அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவேண்டியது இருக்கும். அவருக்கு பின்னர் ராஜஸ்தன் முதல்வராக முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்-ஐ தேர்ந்தெடுக்க கட்சி தலைமை முடிவு செய்திருப்பாதகக் கூறப்படுகிறது. இதற்கு, அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ராஜஸ்தான் எம்எல்ஏக்கள் 90 பேர் மொத்தமாக ராஜினாமா செய்யப்போவதாக தெரிவித்துள்ளனர். இதனால் கட்சியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து அஷோக் கெலாட்டுடன் ஆலோசனை மேற்கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன் கார்கே, அஜய் மாக்கன் இருவரும், காங்கிரஸ் இடைக்காலத்தலைவர் சோனியா காந்தியை சந்தித்து ராஜஸ்தான் காங்கிரஸ் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து விளக்கம் அளித்தனர். மேலும், இது குறித்து இன்று எழுத்துப்பூர்வ அறிக்கையும் சமர்பிக்க உள்ளனர்.
இந்தநிலையில், ராஜஸ்தானில் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள், அக்டோபர் 19-ம் தேதி கட்சி தலைமை தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரே, அடுத்த ராஜஸ்தான் முதல்வர் குறித்த முடிவு எடுக்கப்பட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக அஜய் மாக்கன் தெரிவித்துள்ளார்.