ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளுக்கு பாதுகாப்பு வேண்டும்: பாஜக எம்.எல்.ஏ பேச்சு!

திமுக அரசு வந்தாலே மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று என்று மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி தெரிவித்துள்ளார்

சேலம் மாநகர் அம்மாபேட்டை பரமக்குடி நன்னுசாமி தெருவில் வசித்து வருபவர் ராஜன். இவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சேலம் நகர மண்டல தலைவர் பொறுப்பில் உள்ளார். நேற்று அதிகாலை ஒரு மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் ராஜன் வீட்டின் மீது மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலை பற்றவைத்து வீசி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

பாட்டில் சரியாக பற்றாத காரணத்தால் தீயினால் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதுகுறித்து சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் ஏழு பேரை அழைத்து சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இதில் காதர் உசேன் மற்றும் சையத் அலி ஆகிய இருவர் மண்ணெண்ணெய் குண்டு வீசியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த நிலையில் தமிழக பாஜக சார்பில் சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு குழு அமைக்கப்பட்டு குண்டு வீசப்பட்ட வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உத்திரவிடப்பட்டது. இதன் அடிப்படையில் நேற்று சேலத்தில் ஆர்எஸ்எஸ் நிர்வாகி ராஜன் என்பவரது வீட்டில் மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில் வீசிய சம்பவம் குறித்து, மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி தலைமையில், பாஜக மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி மற்றும் மாநில சிறுபான்மை தலைவி டெய்ஸி ஆகியோர் ராஜன் இல்லத்தில் பாதிப்பு குறித்து ஆய்வு செய்தனர்.

ஆய்விற்கு பின்னர் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பாதுகாப்பற்ற சூழ்நிலை தமிழகத்தில் இருந்து வருகிறது. எந்த விரோதமும், எந்த காரணமும் இல்லாத குடும்பத்தின் மீது தாக்குதல் நடந்துள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட குடும்பத்திற்கு உறுதுணையாக நஙகள் இருப்போம். எந்த காரணத்திற்காக இந்த தாக்குதல் நடைபெற்றது என தெரியவில்லை. அவர்களுக்கு யாரும் பகையாளி இல்லை. அமைதியாக இருந்த குடும்பத்தின் மீது ஏன் தாக்குதல் நடத்தப்பட்டது என முழுமையாக விசாரிக்க வேண்டும்.

மேலும் இந்த ஆய்வு குறித்து பாஜக தலைமைக்கு அறிக்கை சமர்ப்பிப்போம். அதன்படி தலைமை நடவடிக்கை எடுக்கும். தமிழகம் முழுவதும் நடக்கும் தாக்குதல் எந்தவித முன் பகையும் இன்றி நடத்தப்படுகிறது. தனிப்பட்ட கோபத்தில் யார் மீதும் தாக்குதல் நடத்தப்படவில்லை. ஏதோ ஒரு காரியத்திற்காக இந்த தாக்குதலை சமூகவிரோதிகள் செய்து வருகின்றனர்.

திமுக அரசு வந்தாலே மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு சம்பவம் திமுக ஆட்சியில் தான் நடைபெற்றது. இது போன்ற சம்பவங்கள் திமுக ஆட்சியில் நடப்பது அனைவரும் அறிந்தது. தமிழக அரசு அனைத்து ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.