மாஸ்கோ: அமெரிக்க உளவு ரகசியங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய எட்வர்டு ஸ்னோடனுக்கு ரஷ்ய குடியுரிமையை, அந்நாட்டு அதிபர் புதின் வழங்கி இருக்கிறார்.
வேறு நாடுகளை பூர்விகமாகக் கொண்ட 75 பேருக்கு குடியுரிமை ஆணையை ரஷ்யா வழங்கியுள்ளது. இதில் ஸ்னோடனும் இடம்பெற்றிருக்கிறார். இதுகுறித்து இதுவரை ஸ்னோடன் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. அமெரிக்க ரகசயங்களை வெளியிட்டத்தைத் தொடர்ந்து, ஸ்னோடன் ரஷ்யாவுக்கு அகதியாக தஞ்சம் புகுந்தார். ஸ்னோடனை அமெரிக்கா அரசு தங்களிடம் ஒப்படைக்குமாறு தொடர்ந்து கேட்டு வந்தது. ஆனால், ரஷ்யா இதற்கு சம்மதிக்கவில்லை. அமெரிக்காவின் கோரிக்கையை ரஷ்யா நிராகரித்து வந்தது. இந்த நிலையில் ஸ்னோடனுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
யார் இந்த எட்வர்டு ஸ்னோடன்? – அமெரிக்காவின் உளவு ரகசியங்கள் பலவற்றை வெளிப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்னோடன். பிற நாடுகளின் அரசு செயல்பாடுகளையும், சொந்த நாட்டு மக்களையும் அமெரிக்க உளவு அமைப்புகள் தொடர்ந்து ரகசியமாக கண்காணித்து வருவதை அவர் உலகுக்கு பகிரங்கப்படுத்தினார். இதன் காரணமாக அமெரிக்காவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட எட்வர்டு ஸ்னோடன், அதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.