தமிழ்ப் பட உலகில் தாம் பெரிய நகைச்சுவை நடிகராவோம் என்று நாகேஷ் கனவில் கூட நினைத்ததில்லை. பத்து வருடங்களுக்கு முன்னால் மாம்பலம் `கிளப் ஹவுஸ்’ விடுதியில் படுக்க இடமின்றி `மொபைல் நாகேஷாக’த் திண்டாடியபோது, இதே பட்டணத்தில் ஒருநாள் பங்களா வாசமும் கார் சவாரியும் கிடைக்கும் என்று அவர் கற்பனை கூட செய்து பார்த்தது கிடையாது. ஏன், அவர் ஒரு காமெடியன் ஆக வேண்டும் என்று கூட முயற்சிக்கவில்லை. “காரியாலய நாடகங்களிலும் அமெச்சூர் நாடகங்களிலும் நான் நடித்த போது எல்லோரும் சிரித்தார்கள். கைதட்டினார்கள். `நாகேஷ் வந்தால் சிரிக்க வைப்பான்’ என்று அவர்களே முடிவு கட்டி விட்டார்கள். ரசிகர்கள்தான் என்னை நகைச்சுவை நடிகனாக்கினார்கள். ஆகவே முழுப் பொறுப்பும் அவர்களுடையதுதான்” என்கிறார் அவர்.
1951-ம் வருஷம் மார்ச் மாதம் 17-ம் தேதியை அவர் மறக்கவே முடியாது என்கிறார். அன்றுதான் அவருக்கு வைசூரி போட்டது. அதன் பலனாக அவர் முகத்தில் ஏற்பட்ட மாற்றம் அவர் வாழ்க்கையையே மாற்றி விட்டது. தன் முகத்தை கண்ணாடியில் பார்த்துக் குலுங்கிக் குலுங்கி அழுதார். தன் வாழ்க்கையே பாழாகி விட்டது என்று நினைத்தார். கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி. கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தவர், படிப்பை நிறுத்தி விட்டு ஹைதராபாத் சென்று ரேடியோ கம்பெனி ஒன்றில் சிறிது காலம் பணியாற்றி விட்டு பிறகு சென்னையில் குடியேறி, ரயில்வே ஆபீசில் என்.ஜி.ஓ.வாக வேலைக்கு அமர்ந்தார்.
“உண்மையைச் சொல்கிறேன். எனக்குக் கொடுத்த சம்பளம் தண்டம்தான். ஒழுங்காகவே வேலை செய்ய மாட்டேன். நாடக வசனம்தான் உருப்போட்டுக் கிட்டிருப்பேன். நாலு அடிச்சா ஏதாவது சாக்கு சொல்லி விட்டு வீட்டுக்குக் கிளம்பி விடுவேன். ஒரு நாள் மேல் அதிகாரி எனக்கு அனுமதி கொடுக்க மாட்டேன்னுட்டார். `சரி, அப்படின்னா நான் போன வாரம் கடனா கொடுத்த எட்டணாவைத் திருப்பிக் கொடுங்க சார்’ என்று கேட்டு எல்லார் எதிர்லேயும் அவர் மானத்தை வாங்கி விட்டேன். பாவம், அவர்கிட்டே எட்டணா கூட இல்லே! மரியாதையா என்னை வீட்டுக்குப் போகச் சொல்லிவிட்டார்… எப்படி எனக்கு நடிப்பில் ஆசை வந்ததுன்னு கேட்கறீங்களா… ஒரு நாள் மாம்பலம் தேவி பாடசாலையில் ஒரு நாடக ஒத்திகை நடந்து கொண்டிருந்தது. அதுலே ஒரு காரெக்டர் சரியா டயலாக் பேசவில்லை… வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நான், டைரக்டரைப் பார்த்து இப்படிப் பேசினால் நன்றாக இருக்குமே என்று சொல்லி பேசிக் காட்டினேன். ஆனால் அவர் என்னை அலட்சியப்படுத்தி விட்டார். அன்று முதல் எனக்கு நாடகத்திலே நடிக்கணும்னு ஒரு வெறி ஏற்பட்டது… ஆபீஸ்லே `எங்கே இன்பம்’ என்று ஒரு நாடகம் போட்டாங்க. அதுலே ஒரு சீன்லே நடிச்சு நல்ல பெயர் வாங்கினேன். அவ்வளதுதான். அப்புறம் நாடகப் பித்து நல்லா பிடிச்சுடுத்து. அப்போதுதான் வீரபாகு என்கிறவர் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாகச் சொல்லி `தாமரைக் குளம்’ என்கிற படத்தில் நடிக்க அழைத்தார். உடனே வேலையை விட்டுட்டு போய் அதுலே நடித்தேன். ஆனால் பெயரும் வரல்லே… எதிர்பார்த்த பணமும் வரல்லே…”
அதற்குப் பிறகுதான் நாகேஷ் மிகவும் கஷ்டப்பட்டார். அப்போது அவருக்குக் கை கொடுத்து உதவியவர் நடிகர் பாலாஜி. நாகேஷைத் தன் வீட்டிலேயே இருக்கச் சொல்லி நிறைய சாப்பாடும் டானிக்கும் கொடுத்து நல்ல `பர்ஸனாலிட்டி’யாக்கப் பாடுபட்டார். பட முதலாளிகளிடமும், டைரக்டர்களிடமும் முன்னணி நடிகர்களிடமும் நாகேஷை அறிமுகப்படுத்தி வைத்ததோடு அவர்கள் எதிரில் அவரை நடிக்கச் சொல்லியும் மகிழ்ந்தார். தயாரிப்பாளர்களிடம் “சார், இவனுக்கு ஒரு சிறு பாகம் கொடுத்து ஐந்நூறு ரூபாயாவது கொடுங்கள். வேண்டுமானால் என் காண்ட்ராக்டில் ஐந்நூறு ரூபாய் குறைத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லுவாராம்.
“பாலாஜி எனக்குச் செய்த உதவிகளை நான் சாகும் வரை மறக்க முடியாது” என்று சொன்னபோது நாகேஷின் கண்கள் கலங்கின.
எல்லோரையும் சிரிக்க வைக்கும் தாம், சொந்த வாழ்க்கையில் சிரிக்க முடியவில்லை என்கிறார் அவர். அதுவும் இந்த சினிமா வாழ்க்கையின் காரணமாக சாகும் தறுவாயில் இருந்த தன் தாயாரைக் காண முடியாமலேயே போய் விட்டதை நினைத்து நினைத்து ஏங்குகிறார் அவர். இந்தப் போலி வாழ்க்கை அவருக்கு அருவருப்பைத் தருகிறது. சோபாக்களில் உட்காருவதை விட மொட்டை மாடியில் முழங்காலைக் கட்டிக் கொண்டு கொஞ்ச நேரமாவது உட்கார வேண்டும்போல் தோன்றுகிறதாம்! “மனைவியுடன் பேசும்போது கூட சினிமாவில் நடித்த ஒரு சீன்தான் ஞாபகம் வருகிறது. ஆப்த நண்பனிடம் “நாளைக்கு கட்டாயம் ஆறு மணிக்கு சந்திக்கிறேன்’ என்றால் அவன் “என்னடா, உண்மையா சொல்றயா, இல்லை இதுவும் நடிப்பா?” என்கிறான்.
“எது போலி எது அசல் என்றே புரிய மாட்டேங்குது சார்” என்கிறார் அவர்.
“வாங்குகிற பணத்திற்கு உண்மையாக உழைக்க வேண்டும் என்று நினைக்கிறவன் நான். `கலையைக் காப்பாற்றுகிறேன்’ என்று நான் சொல்லத் தயாராயில்லை. `கலைதான் நம்மைக் காப்பாற்றுகிறது’ என்று எல்லோரும் நினைத்தால் கலையும் பிழைக்கும், நாமும் பிழைக்கலாம்.
மணியன் எழுதிய `டாக்டர் நிர்மலா’ நாடகத்தில் `தை தண்டபாணி’ என்ற பாத்திரத்தில் நடித்ததால் அவர் பெயர் தை நாகேஷ் ஆயிற்றாம். ஆங்கிலத்தில் (Thai) என்பதை தாய் என்று சிலர் மாற்றி விட்டார்களாம். ஏதோ ஒரு கிராமத்தில் `கடவுளின் குழந்தை’ என்ற படத்தின் சுவரொட்டியில் `நாய் நாகேஷ்’ என்று கூடப் போட்டார்களாம். “இன்னும் என்னெல்லாம் மாறப் போகிறதோ” என்று சொல்லி விட்டுச் சிரித்தார்.
அவருடைய ஆசை: அமெரிக்காவுக்குப் போய் நகைச்சுவை நடிகர் ஜெரி லூயியை நேரில் சந்தித்துப் பேசவேண்டும் என்பது.