பாலக்காடு: காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடைபெறுகிறது. இதில் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசிதரூர் போட்டியிடுகிறார். அதற்கான வேட்பு மனுவையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் பாரத ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியை கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் சசிதரூர் நேற்று சந்தித்தார்.
பின்னர் சசிதரூர், செய்தியாளர்களிடம் கூறும்போது, “பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பலர், காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடுமாறு என்னிடம் பரிந்துரை செய்தனர். நான் வேட்பு மனுவை தாக்கல் செய்யும் போது எனக்கு கிடைக்கும் ஆதரவை நீங்கள் காண்பீர்கள். பெரும்பாலான மாநிலங்களில் தொண்டர்களின் ஆதரவை பெற்றால் நான் களத்தில் இருப்பேன். நான் கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதில் ஆட்சேபம் எதுவும் இல்லை என்று சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா ஆகிய மூவரும் தெரிவித்துள்ளனர்” என்றார்.
2000-ம் ஆண்டு நவம்பருக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.