இந்தியா மட்டுமல்லாது வேறு எந்த நாட்டுக்குச் சென்றாலும், எந்த மதத்தினருடைய திருமணம் நிகழ்ச்சியென்றாலும் சரி, அங்கு ஆரவாரங்களுக்கு எந்த பஞ்சமும் இருக்காது. அதேசமயம், இதனை வெறுமனே திருமண நிகழ்ச்சி என்று மட்டும் கூறிவிடமுடியாது. ஒருவகையில் எல்லா சொந்தபந்தங்களும் ஒரே நேரத்தில் சந்தித்துக்கொள்ளும் `ரீ யூனியன்’ என்றுகூட இதைக் கூறலாம்.
அப்படியான திருமண நிகழ்ச்சிகளில், வந்த சொந்தபந்தங்கள் அனைவரையும் உபசரித்து, விருந்தளிப்பதென்பது திருமண வீட்டாருக்குப் பெரும்பாடுதான். இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில், திருமண நிகழ்ச்சியொன்றில், வந்தவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திருமண வீட்டார் செய்த செயல் அனைவரையும் முகம் சுளிக்க வைத்துவிட்டது.
உத்தரப்பிரதேசத்தின் ஹசன்பூரில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக ஏராளமானோர் உ.பி-யின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்தனர். அப்போது திருமண வீட்டார் வந்திருந்தவர்களுக்கு உணவு பரிமாறத் தொடங்கியிருகின்றனர். அந்த சமயத்தில், அருகில் வேறொரு திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள், இடம் மாறி இந்த திருமணத்துக்கு வந்துவிட்டனர்.
அப்போது இன்னொரு திருமண ஊர்வலத்திலிருந்து வந்த விருந்தினர்களும் உள்ளே நுழைய, மணமகள் வீட்டாருக்குக் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் உணவு பரிமாறுவதை நிறுத்திய மணமகள் வீட்டார், வந்த விருந்தினர்களை ஆதார் அட்டையைக் காட்டுமாறு தெரிவித்திருக்கின்றனர். மேலும், ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே உணவு என்றும் கூறியிருக்கின்றனர். இதனால் அந்த இடத்தில் சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. மேலும், மணமகள் வீட்டார் செய்த இந்த செயல் சரியா, தவறா என்பது ஒருபுறமிருந்தாலும், நிகழ்ச்சிக்கு ஆதார் அட்டை கொண்டுவராத விருந்தினர்கள் கோபத்திலிருந்ததாகக் கூறப்படுகிறது. வைரலாகி வரும் வீடியோவுக்கு, “கல்யாண சாப்பாட்டு பந்தியிலும் ஆதார் கேட்பதா?” என கமென்ட் செய்கிறார்கள் இணையவாசிகள்.