புதுடில்லி :’புதுடில்லி துணை நிலை கவர்னர் வி.கே. சக்சேனாவுக்கு எதிராக, சமூக வலைதளங்களில் புதிய பதிவுகளை வெளியிடக் கூடாது; ஏற்கனவே வெளியிட்ட பதிவுகளை நீக்க வேண்டும்’ என, ஆம் ஆத்மி கட்சி மற்றும் அதன் ஐந்து தலைவர்களுக்கு புதுடில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.புதுடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.இங்கு துணை நிலை கவர்னராக உள்ள வி.கே.சக்சேனாவுக்கு எதிராக, ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து விமர்சனங்களை முன் வைத்து வருகிறது.சக்சேனா காதி மற்றும் கிராம தொழில் வாரிய தலைவராக இருந்தபோது, செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில், 1,400 கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஆம் ஆத்மி கட்சி புகார் கூறி வருகிறது.
இது தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஆதிஷி சிங், சவுரப் பரத்வாஜ், துர்கேஷ் பாதக், சஞ்சய் சிங், ஜாஸ்மின் ஷா ஆகியோர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.இவர்கள் மீது 2.5 கோடி ரூபாய் கேட்டு, சக்சேனா அவதுாறு வழக்கை தொடர்ந்து உள்ளார்.மேலும், தனக்கு எதிரான சமூக வலைதள பதிவுகளை நீக்க உத்தரவிடும்படியும் அவர் கோரி உள்ளார்.
இதை விசாரித்த புதுடில்லி உயர் நீதிமன்றம், ‘கவர்னருக்கு எதிராக புதிதாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கக் கூடாது; ஏற்கனவே வெளியிட்டுள்ள பதிவுகளை நீக்க வேண்டும்’ என, உத்தரவிட்டு உள்ளது.உயர் நீதிமன்றம் அளித்துள்ள இந்த இடைக்கால உத்தரவையடுத்து, உண்மையே வெல்லும் என்ற அர்த்தத்தில் ‘சத்யமேவ ஜெயதே’ என, சக்சேனா சமூக வலைதளத்தில் பதிவிட்டுஉள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement