மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் உதவியாளர் ரியாஸ் பதி என்பவரை மிரட்டி பணம் பறித்தல் புகாரின் அடிப்படையில் மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து வெர்சோவா போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘வெர்சோவா பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை மிரட்டி, அவரிடம் இருந்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள கார், ரூ.7.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை ரியாஸ் பதி பறித்துள்ளார். அதையடுத்து மிரட்டி பணம் பறித்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ரியாஸ் பதி கைது செய்யப்பட்டார்.
இந்த எப்ஐஆரில் தாவூத் இப்ராகிமின் நெருங்கிய உதவியாளர் சோட்டா ஷகீல் மற்றும் ஷகீலின் உறவினர் சலீம் ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. கைது செய்யப்பட்ட ரியாஸ் பதி கடந்த 2015 மற்றும் 2020ம் ஆண்டுகளில் போலி பாஸ்போர்ட் மூலம் இந்தியாவைவிட்டு வெளிநாடு தப்பிச் செல்ல முயன்றார்’ என்று அவர்கள் கூறினர்.