ஜம்மு: காங்கிரஸில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத், ஜனநாயக ஆசாத் கட்சி என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கிய குலாம் நபி ஆசாத், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி கட்சியை விட்டு விலகினார். இந்நிலையில் ஜனநாயக ஆசாத் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை அவர் நேற்று தொடங்கினார். இது தொடர்பாக அவர் ஜம்முவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எங்கள் கட்சி ஜனநாயக கொள்கைகளை அடிப்படையாக கொண்டிருக்கும். எந்தவொரு வெளி தலைவர் அல்லது பிற கட்சிகளின் தாக்கம் இதில் இருக்காது. சுதந்திரமான சிந்தனை கொண்டிருக்கும். சுதந்திரமான முடிவுகளை எடுக்கும். கட்சியில் எதேச்சதிகாரம் இருக்காது. அதிகாரம் ஒருவரிடம் இல்லாமல் பரவலாக இருக்கும். எனது குடும்பப் பெயருக்கும் கட்சியில் உள்ள ஆசாத் என்ற பெயருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நான் ஏற்கெனவே ஒரு கட்சியுடன் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டதாக பலர் குற்றம் சாட்டினர். ஜம்மு காஷ்மீர் மக்களின் இதயம் மற்றும் மனதுடன் மட்டுமே நாங்கள் கூட்டணி வைத்துள்ளோம். வேறு யாருடனும் இல்லை. கட்சி தொடங்குவதற்கு முன்னால், எந்தவொரு பிராந்திய கட்சி அல்லது தேசிய கட்சியுடன் நாங்கள் கலந்து ஆலோசிக்கவில்லை.
மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர் லால் நேருவின் சிந்தனைகள் மற்றும் கொள்கைகளை எங்கள் கட்சி எடுத்துக்கொள்ளும். மதம், ஜாதி, இனம் சார்ந்த அரசியலால் எங்கள் கட்சியின் கொள்கை பாதிக்கப்படாது. இந்து, முஸ்லிம், சீக்கியர் மற்றும் கிறிஸ்தவர்கள் மனித இதயத்தின் நான்கு அறைகளை போன்றவர்கள் ஆவர்.
கட்சியின் கட்டமைப்புக்காக அடிமட்ட அளவில் தேர்தல் நடத்தப்படும். 50 சதவீத பதவிகள் இளைஞர்களுக்கு வழங்கப்படும். எந்தவொரு கட்சிக்கும் போட்டியாக நாங்கள் கட்சி தொடங்கவில்லை. வகுப்பறையில் மாணவர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போடுவது போலவே நாங்கள் போட்டியிடுவோம். எங்களுக்கு யாரும் எதிரும் இல்லை. இவ்வாறு குலாம் நபி ஆசாத் கூறினார்.
வெளிர் மஞ்சள், வெள்ளை, அடர் நீலம் ஆகிய மூன்று நிறங்களை கொண்ட கட்சிக் கொடியையும் அவர் வெளியிட்டார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவு கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இப்பிரிவு மீட்டெடுக்கப்பட இனி ஒருபோதும் வாய்ப்பில்லை என்று குலாம் நபி ஆசாத் ஏற்கெனவே கூறியிருந்தார்.
இந்நிலையில் நேற்று அவர் கூறும்போது, “370-வது பிரிவு மீட்கப்படாது என்று நான் கூறவில்லை. பிரதமர் அல்லது உள்துறை அமைச்சரிடம் யாராவது வற்புறுத்தலாம் என்று மட்டுமே கூறினேன். என்னிடம் தற்போது அத்தகைய பலம் இல்லாததால் என்னால் வற்புறுத்த முடியாது” என்றார்.