மேலூர்: கொட்டாம்பட்டி பகுதியில் பெய்த சிறு மழைக்கு தாங்காத தொகுப்பு வீடு இடிந்து விழ, 4 வீடுகள் கடும் சேதமாகின. கொட்டாம்பட்டி ஒன்றியம் கம்பூர் ஊராட்சியில் உள்ளது அலங்கம்பட்டி. இங்கு அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட ஆதி திராவிடர் காலனி தொகுப்பு வீடுகள் மிகவும் சேதமாக, ஒழுகி கொண்டிருந்தது. இதுகுறித்து பல முறை கடந்த ஆட்சியின் போது, புகார் கூறியும் மராமத்து பணிகள் நடைபெறவில்லை. இங்கு குடியிருப்பவர்களுக்கு மாற்று வீடுகள் கட்டி தரப்படும் என அப்போது உறுதி அளிக்கப்பட்டதும், காற்றோடு போனது.
தொடர்ந்து இந்த சேதமான வீட்டிலேயே இப்பகுதி மக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் கொட்டாம்பட்டி பகுதியில் பெய்த சிறு மழைக்கு, ஒரு வீடு இடிந்து விழுந்தது. பிரபு (35) என்பவர் தனது மனைவி முத்துலட்சுமி, 3 மகன்கள், ஒரு மகனுடன் வீட்டில் வசித்து வந்தார்.
மழையினால், வீடு ஒழுகவே, அருகில் உள்ள வீட்டில் இவர் தனது குடும்பத்துடன் சென்று தூங்கி உள்ளார். இந்நிலையில் இவரது வீடு முற்றிலும் இடிந்து நேற்று முன்தினம் இரவில் விழுந்துள்ளது. இதனால் இவர்கள் அதிஷ்டவசமாக தப்பினர். இதே போல், சின்ன கருப்பையா, மூக்கம்மா் தம்பதியினரின் வீடு, அழகன் வீரம்மாள் வீடு, நீலாவதி பெரியகருப்பையாவின் வீடு, சிங்கம்மாள் வெள்ள கோபால் வீடு ஆகியவை மழையினால், பகுதி பெயர்ந்து விழுந்தது. தங்களுக்கு மாற்று இடம் வேண்டும் என ஆதிதிராவிடர் காலனி மக்கள், ஊராட்சி தலைவரிடம் நேற்று கோரிக்கை மனு அளித்தனர்.