சென்னை: “3 கட்சிகள் மட்டுமே பங்கேற்கின்ற ஒரு போராட்டமாக இதனை கருதக் வேண்டாம். சனாதன சக்திகளுக்கு இங்கு இடமில்லை. சங்பரிவார்களின் வன்முறைகளுக்கு இங்கே இடம்தரமாட்டோம், அவர்களின் சதிகளை, சதி திட்டங்களை முறியடிப்போம் என்று விரும்புகின்ற அனைவரும் பங்கேற்கக்கூடிய ஒரு அறப்போர்தான் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம்” என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாளையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அவரது உருவசிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “வரும் அக்டோபர் 2-ம் நாள் காந்தியடிகளின் பிறந்தநாள். அன்றைய தினம், தமிழகம் தழுவிய அளவில் மத நல்லிணக்க மனித சங்கிலிப் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருக்கிறோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக இணைந்து இந்தப் அறப்போராட்டத்தை முன்னெடுக்கிறோம்.
காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தோழமைக் கட்சிகளும் இதர ஜனநாயக சக்திகளும், இந்த சமூக நல்லிணக்க மனித சங்கிலிப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும், ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன். முதலில் விசிக மட்டுமே பங்கேற்க கூடிய வகையில், சமூக நல்லிணக்கப் பேரணியை அறிவித்தோம். தோழமை இயக்கங்களான இடதுசாரி இயக்கங்களோடு, பின்னர் கலந்தாலோசித்து ஒருமித்த முடிவெடுத்து பேரணியாக இல்லாமல், சமூக நல்லிணக்க மனித சங்கிலியாக நடத்துவது என்று தீர்மானித்திருக்கிறோம்.
இந்த 3 கட்சிகள் மட்டுமே பங்கேற்கின்ற ஒரு போராட்டமாக இதனை கருதக் வேண்டாம். சனாதன சக்திகளுக்கு இங்கு இடமில்லை. சங்பரிவார்களின் வன்முறைகளுக்கு இங்கே இடம்தரமாட்டோம், அவர்களின் சதிகளை, சதி திட்டங்களை முறியடிப்போம் என்று விரும்புகின்ற அனைவரும் பங்கேற்கக்கூடிய ஒரு அறப்போர்தான் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம்.
தோழமைக் கட்சிகள் உள்ளிட்ட அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். நாம் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும். சனாதன சக்திகளைத் தனிமைப்படுத்த வேண்டும். அவர்களின் சதி திட்டங்களை, மக்கள் விரோத திட்டங்களை முறியடித்தாக வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்” என்று அவர் கூறினார்.