சென்னை: சென்னையை பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக மாற்ற 3000 பெண்களின் கருத்துகளை கேட்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னையை பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக மாற்ற நிர்பயா திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி, காவல் துறை, போக்குவரத் துறை, சமூக நலத் துறை உள்ளிட்ட துறைகள் இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. இந்தத் திட்டத்தில் பாலினக் கொள்கை மையம் சென்னை மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் மூலம் சென்னையை பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக மாற்றவும், பாலின சமத்துவதை ஏற்படுத்தவும் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது.
இந்நிலையில், சென்னையை பாதுகாப்பான நகரமாக மாற்ற 3000 பெண்களிடம் கருத்து கேட்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னையில் 2021-ம் ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. மத்திய குற்ற ஆவண காப்பக அறிக்கையின் படி சென்னையில் 2018ம் ஆண்டு 729 குற்றங்களும், 2020ம் ஆண்டு 576 குற்றங்களும், 2021ம் ஆண்டு 874 குற்றங்களும் பதிவாகி உள்ளது. இதன்படி 2020ம் ஆண்டை விட 2021ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக பதிவாகி உள்ளது.
இந்நிலையில், சென்னையை பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக மாற்ற ஆய்வு ஒன்றை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. தனியார் ஆலோசகர்களை நியமித்து இந்த ஆய்வை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த ஆய்வில் சென்னையில் 18 வயதுக்கு மேற்பட்ட 3 ஆயிரம் பெண்களிடம் கருத்து கேட்கப்படவுள்ளது.
பொது இடங்களில் உள்ள பாதுகாப்பு வசதி, பொது இடங்களின் பயன்பாடு, பொது போக்குவரத்தில் பயணம் செய்யும் போது எதிர்கொள்ளும் இடர்பாடுகள், பள்ளி செல்லும் குழந்தைகள் பொது போக்குவரத்தில் பயணம் செய்யும்போது எதிர் கொள்ளும் இடர்பாடுகள், பொது போக்குவரத்தில் பாதுகாப்பு வசதிகளின் நிலை உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.