சென்னை: ஆட்டோவில் பாலியல் தொல்லை; பெண் மாணவ நிருபரின் புகாரால் கைதான டிரைவர்! – என்ன நடந்தது?

சென்னையில் தனியார் கல்லூரியில் படிக்கும் பெண் மாணவ நிருபர் ஒருவர், ஆட்டோவில் செல்லும்போது ஆட்டோ ஓட்டுநரால் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுசெய்திருக்கிறார். அந்தப் பதிவில், “நேற்று இரவு என்னுடைய நண்பருடன் நான் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு உபர் (Uber) ஆட்டோவில் பயணம் மேற்கொண்டேன். ஆட்டோவிலிருந்து இறங்கும்போது, என்னுடைய நண்பர் ஆட்டோ ஓட்டுநர் செல்வத்துக்குப் பணத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தார்.

அப்போது, நான் ஆட்டோவிலிருந்து இறங்கும்போது, அந்த ஆட்டோ ஓட்டுநர் என்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதனால், அதிர்ச்சியடைந்த நான் கூச்சலிட்டேன். மேலும் அந்த ஆட்டோ ஓட்டுநரை மடக்கிப் பிடிக்க முயற்சி செய்தேன். இருந்தபோதிலும், அவர் அங்கிருந்து ஆட்டோவில் தப்பித்துச் சென்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தேன்.

புகார் அளித்த 30 நிமிடங்கள் கழித்து ஒரு காவல்துறை அதிகாரி நான் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வந்து நடந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார். அதையடுத்து, `தற்போது காவல் நிலையத்தில் பெண் காவல் அதிகாரிகள் யாரும் இல்லாத காரணத்தினால், நீங்கள் காலையில் வந்து புகார் அளியுங்கள்’ என்று என்னிடம் அவர் தெரிவித்தார். அந்த காவல்துறை அதிகாரி, என்னை ஆன்லைனிலும் புகார் அளிக்க அனுமதிக்கவில்லை.

விசாரணை செய்யும் காவல் அதிகாரி

இருந்தபோதிலும், நாங்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் ஊழியர்கள் உதவியுடன் செம்மஞ்சேரி காவல் நிலையத்துக்குச் சென்றோம். இரவு நேரத்தில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதால் காவல் நிலையப் பொறுப்பாளர் எங்களைக் காவல் நிலையத்துக்குள் அனுமதிக்கவில்லை. என்னைக் காவல் நிலைய வாசலில் நிற்கவைத்து பேப்பர் கொடுத்து புகார் எழுதி வாங்கினார்கள். அதோடு, காலையில் வந்து பெண் காவல் அதிகாரியைச் சந்திக்கும்படி சொல்லியிருக்கிறார்கள்.

தற்போது நான் ஆன்லைனில் புகார் அளித்திருக்கிறேன். ஆதாரங்களின்படி, ஆட்டோ ஓட்டுநர் ஐ.பி.சி பிரிவு 354, 506-ன் கீழ் தண்டிக்கப்படவேண்டும். என்னால், நடந்த சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து இதுவரை மீண்டு வரமுடியவில்லை” என்று பதிவு செய்திருந்தார். இந்த பதிவோடு, தான் பயணித்த ஆட்டோ விவரம், அந்த ஓட்டுநரின் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்திருந்தார்.

புகார் அளிக்கும் பாதிக்கப்பட்ட பெண்

செம்மஞ்சேரி பகுதி காவல்துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து ஆட்டோ ஓட்டுநர் செல்வத்தைக் கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் செல்வத்திடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், “அவர்கள் இருவரும் ஆட்டோவில் ஏறும்போது, என்னிடம் ஆன்லைனில் பணம் செலுத்தும் வசதி இல்லை. பணமாகக் கொடுத்துவிடுங்கள் என்று சொல்லினேன். அதற்குச் சம்மதித்து இருவரும் ஏறி பயணம் செய்தார்கள். ஆனால் இருவரும் இறங்கும்போது, தங்களிடம் பணம் இல்லை என்று சொன்னதுடன், என்னுடைய செல்போனை பிடுங்கி அதில் கூகுள்-பே, போன்-பே இருக்கிறதா என்று பார்த்தார்கள்.

அந்தப் பெண்ணிடமிருந்து செல்போனைத் திரும்பப் பெறும்போது, அவர்மீது தெரியாமல் என்னுடைய கை பட்டுவிட்டது” என்று கூறியிருக்கிறார். காவல்துறையினர், அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணை முடிவில், செல்வத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.