செயல்படாத குடிநீர் ATM, முகம் சுளிக்க செய்யும் கழிப்பிடங்கள், குண்டும், குழியுமான சாலை!: அடிப்படை வசதியின்றி தவிக்கும் உதகை சுற்றுலா பயணிகள்..!!

நீலகிரி: உதகையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தரும் நிலையில், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உலக சுற்றுலா தினத்தை இன்று கொண்டாடும் அதே சூழலில், உதகையில் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இங்கிலாந்தில் குளிர்ந்த இனமான காலநிலை உள்ளதால் தங்களது மனம் கவர்ந்த பகுதியாக உதகை நகரை ஆங்கிலேயர்கள் நிர்மாணித்தனர். அப்போதிலிருந்து தமிழகத்தின் பிரசித்திப்பெற்ற கோடை வாச ஸ்தலங்களில் ஒன்றாக மாறிப்போன உதகை, ரோஜா பூங்கா, தொட்டாபேட்டா படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தளங்களும் சுற்றுலா பயணிகளின் உள்ளங்களை கொள்ளை கொண்டது.

வசீகரிப்பின் இருப்பிடமாகவே விளங்கி வருகிறது உதகை. இதனால் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் அன்றாடம் உதகைக்கு வருகை தருகின்றனர். ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில், கழிப்பிடம், குடிநீர், வாகன நிறுத்தம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் முறையாக இல்லை என்ற குற்றச்சாட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத்துடன் மனதை லேசாக்க சுற்றுலாத் தளங்களில் பொழுதை கடத்தலாம் என்று வருகை தரும் மக்கள், குண்டும் குழியுமாக சாலை உள்ளதால் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

கேட்பாரின்றி சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் மக்கள் அச்சத்திற்குள்ளாகி வருகின்றனர். சர்வதேச அளவில் புகழ்பெற்ற உதகையில் அடிப்படை வசதியின்மை, விடுதி கட்டண கொள்ளை போன்ற காரணங்களால் உதகைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் மகிழ்ச்சி குலையும் சூழல் உள்ளது. இன்று உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், தமிழக சுற்றுலா வருவாயில் முக்கிய பங்கு வகிக்கும் உதகையில் இருக்கும் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.