திருமலை- திருப்பதியில் வீற்றிருக்கும் ஏழுமலையானுக்கு ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள், உற்சவங்கள் நடைபெற்று வந்தாலும், புரட்டாசி மாதத்தில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவ விழா மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மொத்தம் 9 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் உற்சவமூர்த்தியான மலையப்ப சுவாமி காலை மற்றும் மாலையில் விதவிதமான வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பது வழக்கம்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய் பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் எளிமையாக நடத்தப்பட்டது. மாடவீதிகளில் ஏழுமலையான் வீதி உலா வரும் நிகழ்வு நிறுத்தப்பட்டு இருந்ததோடு, பக்தர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.
இந்த ஆண்டு நிலைமை ஓரளவுக்கு சீரானதால் பிரம்மோற்சவம் விழா இன்று (27.9.2022) செவ்வாய்க்கிழமை தொடங்கி அக்டோபர் 5ம் தேதி (புதன்கிழமை) வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக திருமலை-திருப்பதி தேவஸ்தானம் முதன்மைச்செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் விழாவில் நாள்தோறும் காலை, இரவு 4 மாட வீதிகளில் வாகன சேவை நடைபெறுகிறது. உற்சவர் மலையப்பசாமி தனித்தும், உபய நாச்சியார்களுடனமும் தங்கம், வைர ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
அப்போது, 4 மாட வீதிகளில் கேலரிகளில் அமர்ந்திருக்கும் பக்தர்கள் உற்சவர் மீது சில்லறை நாணயங்களை வீச வேண்டாம். சில்லறை நாணயங்களை வீசுவதனால் வாகனத்தில் அமர்ந்திருக்கும் அர்ச்சகர்களுக்கும், வாகனத்தை சுமந்து செல்லும் ஊழியர்களுக்கும் சிரமம் ஏற்படும்.
மேலும் தங்கம், வைர ஆபரணங்களும் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. எனவே, பக்தர்கள் உற்சவர் மீது நாணயங்கள் வீசுவதை தவிர்க்க வேண்டும். பிரம்மோற்சவம் விழாவுக்கு வருகிற பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும். இவ்வாறு திருமலை- திருப்பதி தேவஸ்தானம் முதன்மைச்செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி கூறினார்.
பொதுவாகவே திருப்பதி செல்லும் பக்தர்கள் தங்களிடம் உள்ள செல்வத்தை பெருமாளுக்கு கணக்கு பார்க்காமல் அள்ளி வழங்குவது வழக்கம். அதிலும் மாடவீதிகளில் உற்சவர் உலா வரும்போது உணர்ச்சிவசப்படும் பக்தர்கள் காசு, பணத்தை வீசுவது வழக்கமான ஒன்றாக இருந்து வந்தது.
இந்நிலையில் தங்கம், வைர ஆபரணங்கள் சேதம் அடைய வாய்ப்பு உள்ளதாக கூறி, பக்தர்கள் உற்சவர் மீது நாணயங்கள் வீசுவதை தவிர்க்க வேண்டும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டு இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.