திருவாரூர்: தென்மேற்கு பருவமழை வரும் 30-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் தமிழகத்தில் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை பலத்த மழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக இன்று அதிகாலையும் மழை பெய்தது.
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதியில் நேற்று நள்ளிரவு 2 மணி முதல் விடிய விடிய மழை பெய்தது. திருவாரூர், நன்னிலம் பகுதியில் நள்ளிரவு 2 மணி முதல் 4 மணி வரை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதைதொடர்ந்து இன்று காலை வரை சாரல் மழை பெய்தது. இதனால் திருவாரூர், நன்னிலம் தாலுகா பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டார்.
இதைதொடர்ந்து காலை 8.15 மணிக்கு விடுமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். அதில், காலாண்டு தேர்வை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு அறிவித்த விடுமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவித்திருந்தார். பள்ளி விடுமுறை என்றும், பின்னர் விடுமுறை ரத்து என்ற செய்தி சமூக வலைதளங்கள், செய்திகளில் வெளியானது. இதனால் மாணவர்கள் குழப்பமடைந்து தாமதமாக பள்ளிக்கு புறப்பட்டு சென்றனர். திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் 25 ஆயிரம் ஏக்கரில குறுவை சாகுபடி நெற்பயிர்கள் மழைநீர் மூழ்கியுள்ளது. நாகை மாவட்டத்தில் நாகை, வேதாரண்யம், வேளாங்கண்ணி, கீழ்வேளூர், திட்டச்சேரி, திருமருகல் ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை 3 மணி முதல் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, கொள்ளிடம், தரங்கம்பாடி பகுதியில் இன்று காலை 6 மணி முதல் சாரல் மழை பெய்து வருகிறது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் இன்று அதிகாலை முதல் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை தொடர்ந்து 2 மணி நேரமாக நீடித்தது. மேலும் மாவட்டத்தின் பல பகுதியில் லேசான மழை பெய்தது. கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் இன்று காலை வானில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. நன்னிலத்தில் 11 செ.மீ மழை திருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் இன்று காலை வரை பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்) வருமாறு: திருவாரூர் 70.3, நன்னிலம் 111.8, குடவாசல் 31.4, வலங்கைமமான் 19.6, மன்னார்குடி 20.1, நீடாமங்கலம் 20.4, பாண்டவையாறு தலைப்பு 23.8, முத்துப்பேட்டை 2.6 மி.மீ., மழை பதிவானது. மாவட்டம் முழுவதும் மொத்தமாக 300 மி.மீ., சராசரியாக 33.33 மி.மீட்டர் மழை பதிவானது. அதிகபட்சமாக நன்னிலத்தில் 11 செ.மீ. மழை பெய்துள்ளது.