தீக்‌ஷா பூமிக்கு செல்லும் பௌத்தர்களுக்குப் பயண உதவி: ரவிக்குமார் எம்.பி., கோரிக்கை!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள தீக்‌ஷா பூமிக்கு புனிதப்பயணம் செல்லும் பௌத்தர்களுக்குப் பயண உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து முதல்வர் ஸ்டாலினுக்கு விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “புரட்சியாளர் அம்பேத்கர் பௌத்தத்தை ஏற்ற அக்டோபர் 14 ஆம் நாளை இந்தியா முழுவதுமுள்ள அம்பேத்கரியப் பற்றாளர்கள் ‘தம்ம சக்கர ப்ரவர்தன் தினம்’ எனக் கொண்டாடி வருகின்றனர். அந்த நாளில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ‘தீக்‌ஷா பூமி’ யில் கூடி தமது மரியாதையை செலுத்தி வருகின்றனர். லட்சக் கணக்கானவர்கள் கூடும் அந்த விழாவில் பங்கேற்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டிலிருந்தும் ஆயிரக் கணக்கானோர் செல்கின்றனர். தீக்‌ஷா பூமிக்குச் செல்லும் இந்தப் பயணம் புனிதப் பயணமாகவே (pilgrimage) கருதப்படுகிறது.

இந்தப் புனிதப் பயணத்தை மேற்கொள்ளும் அம்பேத்கரியப் பற்றாளர்களில் பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கு ஏனைய புனிதப் பயணங்களுக்குச் செய்வதுபோல தமிழ்நாடு அரசு நிதி உதவி வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். பல்வேறு சமயங்களைச் சேர்ந்தவர்கள் புனிதப் பயணங்களை மேற்கொள்வதற்கு பயண உதவித் தொகையைத் தமிழ்நாடு அரசு ஏற்கனவே வழங்கி வருகிறது.

ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு நீண்ட காலமாகவே இத்தகைய பயண உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன் பின்னர் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது 2011ஆம் ஆண்டு ஜெருசலேம் நகருக்குப் புனிதப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டில் மானசரோவர், முக்திநாத் ஆகிய இடங்களுக்குப் புனிதப் பயணம் மேற்கொள்ளும் 500 பேருக்கு உதவித் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த வரிசையில் ‘தம்ம சக்கர ப்ரவர்த்தன தினத்தில்’ தீக்‌ஷா பூமிக்கு மேற்கொள்ளப்படும் பயணத்தையும் புனிதப் பயணமாக அங்கீகரித்து அவர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையினருக்கு பயண உதவித்தொகை வழங்கி பௌத்தத்தின் மீது நம்பிக்கை கொண்டோருக்கும் அங்கீகாரம் வழங்கிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.