புதுடெல்லி: நாடு முழுவதும் 2-வது முறையாக 8 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பின் அலுவலகம், நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில் 250-க்கும் மேற்பட்டோர் பிடிபட்டனர். அவர்களிடம் விசாரணைநடத்தப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியின் சில பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த 2006-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புக்கு நாடு முழுவதும் 24 மாநிலங்களில் கிளைகள் உள்ளன. பல்வேறு கலவரங்கள், படுகொலைகளில் இந்த அமைப்பின் நிர்வாகிகளுக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதன்பேரில், தமிழகம் உட்பட நாடு முழுவதும் 15 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 22-ம் தேதி திடீர் சோதனை நடத்தினர். அப்போது 45 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. வங்கிகளில் பிஎஃப்ஐ அமைப்பு ரூ.120 கோடி டெபாசிட் செய்திருப்பதும், வளைகுடா நாடுகளில் இருந்து ஹவாலா முறையில் அதிக அளவிலான தொகையை கொண்டு வந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில், நாடு முழுவதும் 2-வது முறையாக பிஎஃப்ஐ அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. டெல்லி, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், கேரளா, கர்நாடகா, அசாம் ஆகிய 8 மாநிலங்களில் 8 மணி நேரத்துக்கும் மேலாக இந்த சோதனை நீடித்தது.
தலைநகர் டெல்லியில் ஷாகின்பாக், ஜாமியா நகர் பகுதிகளில் என்ஐஏ அதிகாரிகள், டெல்லி சிறப்பு படை போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கையாக இந்த பகுதிகளில் 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டது. டெல்லியில் 32 பேர் பிடிபட்டனர்.
உத்தர பிரதேசத்தில் தலைநகர் லக்னோ உட்பட 26 மாவட்டங்களில் 44 பேர்பிடிபட்டனர். மத்திய பிரதேசத்தில் தலைநகர் போபால், உஜ்ஜைனி, இந்தூர் உள்ளிட்ட நகரங்களில் நடந்த சோதனையில் 21 பேர் பிடிபட்டனர்.
மகாராஷ்டிராவில் அவுரங்காபாத், ஜல்னா, சோலாபூர், பர்பானி உள்ளிட்ட பகுதிகளில் என்ஐஏ அதிகாரிகளுடன், மகாராஷ்டிர தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸாரும் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர். அங்கு 43 பேர் சிக்கினர். குஜராத்தில் அகமதாபாத், பனாஸ்காந்தா, நவ்சாரி ஆகிய நகரங்களில் நடந்த சோதனையில் 15 பேர் சிக்கினர்.
கர்நாடகாவில் சாம்ராஜ்நகர், பிதார், மங்களூரு, சித்ரதுர்கா உள்ளிட்ட நகரங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 72 பேர் பிடிபட்டனர். கேரளாவின் சில இடங்களில் மாநில போலீஸார் சோதனை நடத்தி 4 பேரை கைது செய்துள்ளனர். வயநாடு பகுதியில் நடந்த சோதனையில் இரும்பிலான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வடகிழக்கு மாநிலமான அசாமில் 7 மாவட்டங்களில் சோதனை நடத்தப்பட்டது. கம்ரூப், கோல்பரா, கரீம்கஞ்ச், உதல்குரி, தராங் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 20 பேர் சிக்கினர்.
சோதனை குறித்து என்ஐஏ வட்டாரங்கள் கூறியதாவது:
நாடு முழுவதும் பிஎஃப்ஐ அலுவலகம், நிர்வாகிகளின் வீடுகளில் கடந்த 22-ம் தேதி ‘ஆக்டோபஸ்’ என்ற பெயரில் சோதனை நடத்தினோம். தற்போது 8 மாநிலங்களில் ‘ஆக்டோபஸ் 2’ சோதனையை நடத்தினோம். இதில் 250 பேர் பிடிபட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்.
வரும் 2047-ம் ஆண்டில் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் பிஎஃப்ஐ செயல்பட்டு வருகிறது. நாச வேலைகளில் ஈடுபடுவதற்காக நேபாளத்தில் இருந்து பிஹாருக்கு ஆயுதங்கள், வெடிபொருட்களை கடத்தி வரும் பிஎஃப்ஐ அமைப்பினர், இங்கிருந்து நாடு முழுவதும் ஆயுதங்களை அனுப்புகின்றனர்.
மத்திய பிரதேசத்தின் 25 மாவட்டங்களில் பிஎஃப்ஐ கிளைகள் செயல்படுகின்றன. இதில் உஜ்ஜைனி, இந்தூர் உள்ளிட்ட 5 மாவட்ட பகுதிகளில் பிஎஃப்ஐ தொண்டர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு பயிற்சி பெறுவோர் நாடு முழுவதும் சென்று முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கின்றனர். கராத்தே, குங்பூ உள்ளிட்ட தற்காப்புக் கலைகள், ஆயுதப் பயிற்சிக்காக பல்வேறு மாநிலங்களில் முகாம்களும் நடத்தப்பட்டுள்ளன.
மதுரா, கியான்வாபி, நுபுர் சர்மா, ஹிஜாப், சிஏஏ உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி நாடு முழுவதும் அமைதியை சீர்குலைக்க பிஎஃப்ஐ நிர்வாகிகள் சதித் திட்டங்களை தீட்டியுள்ளனர். விவசாயிகளின் போராட்டத்திலும் இந்த அமைப்பினர் திரைமறைவில் இருந்து செயல்பட்டுள்ளனர்.
சவுதி அரேபியா, ஓமன், கத்தார், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஹவாலா முறையில் பிஎஃப்ஐ அமைப்புக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது. ஏராளமான போலி வங்கிக் கணக்குகளில் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
சிஏஏ எதிர்ப்பு போராட்டம், நுபுர் சர்மாவுக்கு எதிரான போராட்டங்கள், டெல்லி கலவரத்துக்கு பிஎஃப்ஐதான் காரணம். பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக, ஆர்எஸ்எஸ் தலைவர்களை கொலை செய்யவும் இந்த அமைப்பு சதித் திட்டம் தீட்டியிருக்கிறது.
பகலில் சோதனை நடத்தினால் பிஎஃப்ஐ தொண்டர்கள் சட்டம்–ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்துகின்றனர். இதை தவிர்க்கவே, கடந்த முறைபோல தற்போதும் அதிகாலை 1 மணி முதல் சோதனை நடத்தப்பட்டது. இதில் பல முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தடை விதிக்க வாய்ப்பு
பிஎஃப்ஐ அமைப்பு மற்றும் அதன் நிர்வாகிகள் மீது என்ஐஏ மட்டுமன்றி, அமலாக்கத் துறை, சிஆர்பிஎஃப், அந்தந்த மாநில போலீஸார், தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸாரும் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
என்ஐஏ தரப்பில் தேசிய அளவில் 2 முறை சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்பாக பிஎஃப்ஐ அமைப்புக்கு தடை விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சகம் தடை உத்தரவை பிறப்பிக்கலாம். அதற்கு முன்பாக என்ஐஏ, அமலாக்கத் துறை சமர்ப்பிக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் பிஎஃப்ஐ அமைப்புக்கு நீதிமன்றம் தடை விதிக்கவும் வாய்ப்பு உள்ளதாக உள்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.