“நிர்வாண வீடியோ எடுத்து, திருமணங்கள் செய்யவைத்தனர்!" – 6 திருமணங்கள் செய்து கைதான பெண் வாக்குமூலம்

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகில் உள்ள வெங்கரை அருகே இருக்கும் கள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் தனபால். இவருக்கும், மதுரையைச் சேர்ந்த சந்தியா (26) என்பவருக்கும், திருமண புரோக்கர் பாலமுருகன் என்பவர் மூலம் கடந்த 7-ம் தேதி, கொளக்காட்டுப்புதூர் அருகே உள்ள புதுவெங்கரை அம்மன் கோயிலில் திருமணம் நடைபெற்றது. இரண்டு நாள்கள் தனபாலோடு ‘குடித்தனம்’ நடத்திய சந்தியா, 9-ம் தேதி அதிகாலையில் தனது உடமைகளை எடுத்துக்கொண்டு ஓட்டம்பிடித்தார். ‘சந்தியா ஓர் ஏமாற்று பேர்வழி’ என்பதை உணர்ந்த தனபால், இது குறிது பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதற்கிடையில், வேறு ஒரு புரோக்கர் மூலம் அதே பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு நபரை சந்தியா திருமணம் செய்ய முயன்றதை அறிந்த தனபால், திருச்செங்கோட்டில் நடக்கவிருந்த அந்தத் திருமணத்தை நிறுத்தியதோடு சந்தியா, பெண் புரோக்கர் தனலட்சுமி, உறவினர் அய்யப்பன், புரோக்கர் தனலட்சுமியின் உறவினர் கௌதம், கார் டிரைவர் ஜெயவேல் ஆகிய 5 பேரையும் தனபால் மற்றும் உறவினர்கள் வளைத்துப் பிடித்து, மரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள்

அவர்கள் வந்த காரையும் பறிமுதல் செய்து, போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீஸார், தீவிர விசாரணை நடத்தியதில், தனது திருமணத்துக்கு ஏற்பாடு செய்ததாக தனபால் கொடுத்தப் புகாரின் பேரில், மதுரையைச் சேர்ந்த புரோக்கர்கள் பாலமுருகன், ரோஷினி, மாரிமுத்து, மணப்பெண் சந்தியா, பெண் புரோக்கர் தனலட்சுமி, உறவினர் அய்யப்பன், கார் டிரைவர் ஜெயவேல், தனலட்சுமி உறவினர் கௌதம் ஆகிய 8 பேர்மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். தனபால் மற்றும் உறவினர்கள் தாக்கியதில் காயமடைந்த அய்யப்பனை, பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், அவர் அங்கிருந்து தப்பியோடி, தலைமறைவாகிவிட்டார்.

பரமத்தி வேலூர்

இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரை சந்தியா எட்டாவதாக திருமணம் செய்யவிருந்த தகவல் வெளியாகி, போலீஸாரை அதிரவைத்தது. சந்தியா உள்ளிட்ட தில்லாலங்கடி கும்பல்மீது பாண்டமங்கலத்தைச் சேர்ந்த வாத்து வியாபாரி மாரியப்பன் என்பவர், பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் சந்தியாவுக்கும், தனக்கும் திருமணம் செய்ய முடிவாகி, நிச்சயதார்த்தம் நடந்திருப்பதாக தெரிவித்தார். அதோடு, வரும் ஐப்பசி மாதம் திருமணம் நடக்க இருந்ததாகவும், அதற்காக புரோக்கர் கமிஷனாக தன்னிடம் இருந்து ஒன்றரை லட்சம் தர பேசி, முதற்கட்டமாக ரூ.30,000 தான் கொடுத்ததாகவும் புகாரில் குமுறியிருந்தார். இந்த நிலையில்தான், இந்த மாதம் மட்டும் சந்தியா அண்ட் கோ குழு, பரமத்தி வேலூர் பகுதியில் மட்டும், ‘போலி திருமணம்’ மூலம் மூன்று பேரை ஏமாற்றியிருப்பது தெரியவந்தது.

இந்தக் கும்பல் திருமணத்தை மையப்படுத்தி, பெரிய நெட்வொர்க்காக இயங்கியிருப்பதை உணர்ந்த போலீஸார், தங்களது கிடுக்கிப்பிடி விசாரணையைத் தொடர்ந்தனர். அப்போது காவல்துறையினரிடம் சந்தியா, “மதுரையைச் சேர்ந்த திருமண புரோக்கர் பாலமுருகன் மற்றும் அவர் கூட்டாளிகளான ரோஷினி, மாரிமுத்து ஆகியோர் என்னைக் கட்டாயப்படுத்தி நிர்வாணமாக்கி புகைப்படங்கள் மற்றும் ஆபாச வீடியோக்கள் எடுத்து வைத்திருக்கின்றனர். மோசடி திருமணத்துக்கு சம்மதிக்காவிட்டால், நிர்வாண படம் மற்றும் நிர்வாண வீடியோக்களை இணையதளங்களில் வெளியிட்டு விடுவோம் என்று என்னை மிரட்டி வந்ததால், நான் இந்த போலியான திருமணங்களுக்கு சம்மதித்தேன். மேலும், என்னைப் போல இன்னும் நான்கு பெண்கள் இவர்களிடம் சிக்கியிருக்கின்றனர். போலி திருமணம் மூலம் கிடைக்கும் பணம் முழுவதும் அவர்களே வைத்துக்கொள்வார்கள். எங்களுக்கு சிறிய தொகை மட்டும் தருவார்கள். மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீடு வாடகைக்கு எடுத்து எனக்குத் தருவார்கள். எனக்கு பெற்றோர்கள் இல்லை. ரோஷினி, மாரிமுத்து ஆகியோரை அக்கா, மாமாவாக நடிக்க எனது வீட்டில் விட்டுவிடுவார்கள். திருமண ஆசையில் வரும் இளைஞர்களிடம் பாசமாகப் பேசி, மிகவும் நெருங்கமாக பழக வேண்டும்.

மணகோலத்தில் சந்தியா

பின்னர் அவர்களிடம் மொபைல் போன், பட்டுப்புடவை, பணம், நகை வேண்டுமென ஆசைவார்த்தைகளால் பேசி அவர்களிடமிருந்து அவற்றை வாங்கி இவர்களிடம் கொடுத்து விடவேண்டும். திருமணம் முடிந்தவுடன் நான் தங்கியிருந்த வீட்டை காலி செய்து விடுவார்கள். நானும் கிடைத்த பொருள்களை சுருட்டிக்கொண்டு, தப்பிவிடுவேன். சில சமயங்களில் மாப்பிள்ளை வீட்டாருக்கு பால் மற்றும் காஃபியில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துவிட்டு, அவர்கள் நன்கு தூங்கும்போது அங்கிருந்து பொருள்களை சுருட்டிக்கொண்டு காரில் பறந்து விடுவோம். மாப்பிள்ளை வீட்டார் அவமானங்களுக்கு பயந்து பெரும்பாலும் போலீஸில் புகார் கொடுப்பதில்லை. நாமக்கல், கரூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், காங்கேயம் பகுதியிலும் இது போல் மோசடி திருமணம் செய்து, பலரை ஏமாற்றியிருக்கிறோம். என்னைபோல் நான்கு பெண்கள் இவர்களிடம் சிக்கியிருக்கின்றனர். கட்டாயப்படுத்தி ஆபாச வீடியோ எடுத்து என்னை மிரட்டி வரும் போலி பெண் புரோக்கர் பாலமுருகன்மீது மதுரை போலீஸில் புகார் கொடுத்திருக்கிறேன். ஆனால், அவர்கள் பாலமுருகன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று கூறியதாகச் சொல்லப்படுகிறது.

‘இது என்ன கூத்து?’ என்று நினைத்த போலீஸாருக்கு, தப்பியோடியதாகச் சொல்லப்படும் புரோக்கர் அய்யப்பன் பேசியதாக வெளியாகியிருக்கும் வீடியோ ஒன்று, இன்னும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வீடியோவில் அய்யப்பன், “நாமக்கல் மாவட்டத்தில் இதேபோல் வேறு பெண்களை வைத்தும், போலி திருமணம் மூலம் 12 பேர் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். மதுரையைச் சேர்ந்த பாலமுருகன்தான் இந்த நெட்வொர்க்குக்கு தலைவன். நாங்க அவன் சொல்கின்ற வேலையை செய்வோம். போலி திருமணம் முடிந்து தப்பிவரும் பெண்களிடமிருக்கும் பொருள்களை விற்று, பிரித்துக்கொள்வோம். தப்பு பண்ணிட்டேன்.

பறிமுதல் செய்யப்பட்ட கார்

ஆனா, இதுக்கு மேல இவங்களோட நான் சேரமாட்டேன்” என்று பேசியிருக்கிறார்.

ஆனால், பரமத்தி வேலூர் காவல் நிலைய தரப்பில், “அய்யப்பன் கூறுவது போல் உள்ள வீடியோ, போலீஸார் வாக்குமூலமாக எடுத்தது அல்ல. அவர்மீது புகார் கொடுத்த பாதிக்கப்பட்டவர்கள் எடுத்ததாகத் தெரிகிறது. அய்யப்பனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது. பாலமுருகன் சிக்கினால்தான், இந்த விவகாரத்தில் பல உண்மைகள் வெளிவரும்” என்கிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.