'பணம் சம்பாதிப்பதே காங். தலைவர்கள் நோக்கம்' – அமித் ஷா குற்றச்சாட்டு

மருத்துவ உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு பதிலாக காங்கிரஸ் பணம் சம்பாதித்தது என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டி உள்ளார்.

குஜராத் மாநிலத்தில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 27 ஆண்டுகளாக இங்கு பாஜக ஆட்சியில் உள்ளது. இருப்பினும் இந்த முறை குஜராத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தீவிர முனைப்பு காட்டி வருகின்றன.

இந்த நிலையில் பாஜக மூத்தத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ளார். நேற்று முதல் அங்கு பல்வேறு நலத்திட்டங்களுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டி வருகின்றார்.

இந்த நிலையில் இன்று காந்தி நகர் மாவட்டத்தில் உள்ள கலோல் நகரில் நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் அமித் ஷா அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

2014 ஆம் ஆண்டுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, மருத்துவக் கல்வி வசதிகளை மேம்படுத்துகிறோம் என்ற பெயரில் காங்கிரஸ் தலைவர்கள் பணம் சம்பாதித்தனர். மருத்துவர்கள் இல்லாமல் மருத்துவ உட்கட்டமைப்புகளை மட்டும் மேம்படுத்துவதில் என்ன அர்த்தம்?

பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு, இந்த சூழ்நிலை மேம்பட்டது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், 60 கோடி ஏழைக் குடிமக்கள் இப்போது இலவச சிகிச்சை (ரூ. 5 லட்சம் வரை) பெறுகின்றனர். மேலும், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த தேவையான சுகாதார உள்கட்டமைப்பை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி 64 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ் 600 மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் 35 ஆயிரம் புதிய படுக்கைகள் சேர்க்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.