பண்ருட்டி ராமச்சந்திரன் கட்சிக்கு அவப்பெயர் உண்டாகும் விதத்தில் நடந்து கொண்டதாக கூறி
அவரை அதிமுகவிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சம் பெற்ற நிலையில் கட்சி ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என இரு பிளவுகளாக நிற்கிறது.
இரு தரப்பும் எதிர்தரப்பில் உள்ளவர்களை கட்சியிலிருந்து நீக்கி வந்த நிலையில் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். இதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளதால் இந்த பிரச்சினை தொடர்ந்து வருகிறது.
இடைக்கால பொதுச்செயலாளர் நான் தான் என எடப்பாடி பழனிசாமியும், ஒருங்கிணைப்பாளர் நான் தான் ஓ.பன்னீர் செல்வமும் செயல்பட்டு வருகின்றனர். சசிகலாவோ நான் தான் பொதுச்செயலாளர் என கூறிவருகிறார்.
இன்று காலை பண்ருட்டி ராமச்சந்திரனை அதிமுகவின் அமைப்புச் செயலாளராக ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டார். கழக உறுப்பினர்கள் அவருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அடுத்த சிறிது நேரத்தில் எடப்பாடி பழனிசாமி பண்ருட்டி ராமச்சந்திரனை கட்சியிலிருந்து நீக்கி, யாரும் அவருடன் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது என உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திரு. பண்ருட்டி S. ராமச்சந்திரன் அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்” தெரிவித்துள்ளார்.