டேராடூன்: உத்தராகண்ட் சொகுசு விடுதி ஒன்றில் வரவேற்பாளராக வேலை பார்த்து வந்த அங்கிதா பண்டாரி என்ற 19 வயது இளம் பெண்ணின் கொலை வழக்கில், அந்த விடுதியின் வேலை பார்த்த முன்னாள் ஊழியர்கள் கொடுத்துள்ள வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தின் பாஜக மூத்த தலைவராக இருந்தவர் வினோத் ஆர்யா. இவர் மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் ஆவார். இவரது மகன் புல்கிட் ஆர்யாவுக்கு ரிஷிகேஷ் அருகே சொகுசு விடுதி ஒன்று உள்ளது. இதில் வரவேற்பாளராக அங்கிதா பண்டாரி என்ற பெண்ணை கடந்த 18-ம் தேதி முதல் காணவில்லை என்று அங்கிதாவின் தந்தை, புல்கிட் ஆர்யா ஆகியோர் போலீஸில் புகார் கொடுத்தனர். போலீஸாரின் விசாரணையில் அங்கிதாவை, புல்கிட் ஆர்யாதான் கொலை செய்தார் என்பது தெரியவந்தது. இதையடுத்து புல்கிட் ஆர்யா உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், அங்கிதாவின் உடலையும் போலீஸார் மீட்டு விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையில் சொகுசு விடுதியின் முன்னாள் ஊழியர்கள், அந்த விடுதியில் நடந்த சட்டவிரோத நடவடிக்கை குறித்து சாட்சியளித்துள்ளனர். அதில், “அந்த விடுதியில் பாலியல் தொழில், போதைப்பொருட்கள் புழக்கம் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் நடந்தன. விடுதி உரிமையாளரான புல்கித் ஆர்யா அடிக்கடி சிறப்பு விருந்தினர்களை அழைத்து வருவார். அதேபோல் அடையாளம் தெரியாத பெண்களும் அழைத்து வரப்படுவார்கள். அந்தப் பெண்கள் சிறப்பு விருந்தினர்களுடன் இருப்பார்கள். அவர்களுக்கு புல்கித் ஆர்யாவினால் ஏற்பாடு செய்யப்படிருக்கும் உயர் ரக மதுவுடன் கஞ்சா போன்ற போதைப்பொருட்களும் வழங்கப்படும்” என்று தெரிவித்தனர்.
அங்கிதாவின் முதற்கட்ட உடற்கூராய்வு அறிக்கையில், அவர் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளதாகவும், இறப்பதற்கு முன்பு ஏற்பட்ட காயங்கள் உடலில் இருந்தன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனை அங்கிதாவின் இறுதிக்கட்ட உடற்கூராய்வு அறிக்கையை திங்கள்கிழமை மாலை காவல் துறையிடம் வழங்கியது. இந்த அறிக்கையை அங்கிதாவின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட உத்திரவாதத்தின் படி அவர்களிடம் காண்பிக்கப்பட்டது என்று அம்மாநில டிஜிபி அசோக் குமார் தெரிவித்தார். ஆனால், அறிக்கையின் விவரங்களை அவர் வெளியிடவில்லை.
இந்தக் கொலை தொடர்பாக கடந்த வாரத்தில் சொகுசு விடுதியின் உரிமையாளர் புல்கித் ஆர்யா, விடுதியின் உதவி மேலாளர் அனிக்த் குப்தா, மேலாளர் சுராப் பாஸ்கர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அம்மாநில முதல்வரின் உத்தரவின் பெயரில் சொகுசு விடுதியின் சில பகுதிகள் இடிக்கப்பட்டன. இதனால் ஆதாரங்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால், கட்டிடத்தை இடிப்பதற்கு முன்பே அனைத்து ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், தனது மகளின் இறுதிச்சடங்கு அவசர அவசரமாக நடத்தப்பட்டதாகவும், அதில் தன்னைக் கலந்துகொள்ள அனுமதிக்கவில்லை என்றும் அங்கிதாவின் தாய் குற்றம்சாட்டியுள்ளார்.