நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் அரசினர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் அசோகன் (38) என்பவர் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வந்திருக்கிறார். இந்த நிலையில், அந்தப் பள்ளியில் படிக்கும் 11,12-ம் வகுப்பு மாணவிகள் 18 பேர், “உடற்கல்வி ஆசிரியர் அசோகன் வாட்ஸ்அப்பில் தவறானச் செய்திகளை அனுப்பி, எங்களை பாலியல் வன்கொடுமை செய்தார்” என பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கடந்த 21-ம் தேதி பகீர் புகாரளித்தனர்.
அந்தப் புகாரை தலைமையாசிரியர் பெண் ஆசிரியர்கள் 2 பேர் மூலம் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரனை நடத்தி, அறிக்கையை கலெக்டர், எஸ்.பி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். இந்த நிலையில், இது குறித்த புகாரின் பேரில் பள்ளிக்கு வந்த லோக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்க்கொடி, வி.ஏ.ஓ.ரவிக்குமார், உளவுத்துறை போலீஸார், சமுதாய நலத்துறை அதிகாரிகள் மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். இந்த விவகாரத்தில், வெகுண்டெழுந்த பெற்றோர்கள், “தவறுசெய்த ஆசிரியர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தனர்.
இதனிடையே ஆசிரியர் அசோகன் கடந்த 19-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார். பள்ளி மாணவிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர் அசோகன் பள்ளியின் அருகில் டியூசன் சென்டர் நடத்தி வந்திருக்கிறார். மாணவிகளை டியூஷன் வகுப்புக்கு அழைத்து அங்கும் பாலியல் தொந்தரவு செய்ததாகத் தெரிகிறது. இது தொடர்பாக விசாரணைக்கு வந்த அதிகாரிகளிடம் பள்ளியின் முன் கூடிய பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இதனால் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.
இந்த நிலையில் பள்ளி மாணவிகள் கொடுத்தப் புகாரின் பேரில் போலீஸார் உடற்கல்வி ஆசிரியர் அசோகன்மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்து, தலைமறைவாக இருந்த அவரைக் கைதுசெய்தனர். விசாரணையில் ‘அதிர்ச்சியூட்டும் செய்திகள் வெளிவரக்கூடும்’ என்கிறார்கள்.