டெல்லியின் மெஹ்ராலி பகுதியில் ஒரு விமானப் பணிப்பெண் அரசியல் பிரமுகரால் பாலியல் வன்கொடுமைசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், “நான் விமானப் பணிப்பெண்ணாக வேலை செய்து வருகிறேன். கடந்த ஒன்றரை மாதமாத கான்பூரில் வசிக்கும் ஒரு அரசியல் கட்சியின் உள்ளூர் தலைவர் ஹர்ஜீத் யாதவ் என்பவருடன் நட்புரீதியாக பழகி வந்தேன்.
இந்த நிலையில், அண்மையில் குடிபோதையில் எனது வீட்டுக்கு வந்த ஹர்ஜித் யாதவ் என்னை வலுகட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தார். எவ்வளவு தடுத்தும் அவரிடமிருந்து என்னால் தப்பிக்க முடியவில்லை. இறுதியில், அவரை எப்படியோ ஒரு அறையில் தள்ளி பூட்டிவிட்டேன். அவர்மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இளம்பெண்ணின் புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார், இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய காவல் துணை ஆணையர் (தெற்கு) சந்தன் சவுத்ரி, “பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து காவல் நிலையத்துக்கு அழைப்பு வந்தது. அதைத் தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்தோம். குற்றவாளி அறையில் பூட்டப்பட்டிருந்தார். உடனே அவர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். அவர்மீது, 376 (பாலியல் வன்கொடுமை), 323 (தன்னிச்சையாக புண்படுத்துதல்), 509 (பெண்களை அவமரியாதை செய்தல்) மற்றும் 377 (இயற்கைக்கு மாறான குற்றங்கள்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்தார்.