நாடு முழுவதும் 15 மாநிலங்களில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் தொடர்புடைய 93 இடங்களில் அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை, மாநில போலீசார் ஆகியோர் கடந்த 22ஆம் தேதி சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் 106 பேர் மத்திய விசாரணை அமைப்புகளால் கைது செய்யப்பட்டனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகி ஷபீக் பயேத் என்பவர் கேரளாவில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட குறிப்புகளின்படி, பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திட்டமிட்டதாகவும், இதற்காக பயிற்சி முகாம் ஒன்றை அந்த அமைப்பு ஏற்பாடு செய்திருந்ததாகவும் அமலாக்கத்துறை தெரிவித்தது.
மேலும், இந்த அமைப்பு சேகரித்த 120 கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்களையும் கைப்பற்றியுள்ள அமலாக்கத்துறை, நாடு முழுவதும் கலவரத்தை ஏற்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தொடர்புடைய இடங்களில் நாடு முழுவதும் இன்று மீண்டும் சோதனை நடைபெற்றது. அதன் முடிவில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு, எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் 247 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் மட்டும் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 40 பேர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள்.
இதேபோல், மத்தியப்பிரதேசத்தில் 21 பேரும், அசாம் மாநிலத்தில் 25 பேரும், டெல்லியில் 30 பேர் உள்பட நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு, எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் 247 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்பும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றாலும், தற்போதைய சோதனைகளின் தொடர்ச்சியாக, அந்த அமைப்பு தடை செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த சோதனைகளை எதிர்த்து நாடு முழுவதும் ஆங்காங்கே அந்த அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேஷனல் டெவலப்மென்ட் ஃப்ரன்ட் என்ற அமைப்பு பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா என்ற பெயரில் புதிய அமைப்பாக 2006ஆம் ஆண்டில் மாறியது. இது ஒரு இஸ்லாமிய அமைப்பு. நாடு முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், மனித உரிமைகளுக்காக பாடுபடும் இயக்கமாகவும் உள்ளது. இந்த அமைப்பின் அரசியல் பிரிவாக இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்.டி.பி.ஐ) 2009ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இருப்பினும், இந்த அமைப்பின் மீது ஏரளமான குற்றச்சாட்டுகளை பாஜகவினர் முன்வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.