புதுச்சேரி பந்த்: தனியார் பள்ளியை மூட வலியுறுத்திய இந்து முன்னணியினரை விரட்டியடித்த பெற்றோர்கள்… வீடியோ

புதுச்சேரி: திமுக எம்பி ஆராசாவின் இந்து துவேசத்தை  கண்டித்து இன்று புதுச்சேரியல் பந்த் நடைபெற்று வருகிறது. இதையொட்டி பல்வேறு பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில்,  தனியார் பள்ளி ஒன்று பள்ளியை மூடாமல் மாணவர்களுக்கு தேர்வு நடத்திக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த இந்து முன்னணியினர் அங்கு சென்று பள்ளியை மூட வலியுறுத்தி வந்த நிலையில், அங்கு இருந்த குழந்தைகளின் பெற்றோர்கள், அவர்களை  விரட்டியடித்தனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

இந்துக்கள் குறித்தும், இந்து மதம் குறித்தும் பேசிய திமுக எம்பி ஆராசாவை கண்டித்தும், அவர்மீது மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், புதுச்சேரியில் இன்று ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்திற்கு இந்து முன்னணியினர் அழைப்பு விடுத்திருந்தனர். இதையடுத்து, இந்து முன்னணியினருடன் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியும், பந்த் போராட்டத்தை விலக்கிகொள்ள மறுத்து விட்டனர். அதைத்தொடர்ந்து, மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், இந்து முன்னணி நிர்வாகிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் நடத்துவது உறுதியானது. அதன்படி இன்று காலை முதல் புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

பந்த் போராட்டத்தின் போது அமைதியான முறையில் பொதுமக்கள், வணிகர்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி போராட்டம் நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும்,  வியாபாரிகள் மற்றும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டு இருப்பதாக கூறப்பட்டது.

இருந்தாலும் இந்து முன்னணியினரின் முழு அடைப்பு காரணமாக, பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. அதே போல் புதுச்சேரியில் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அரசு பள்ளிகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் பெரும்பாலான பள்ளிகள் காலியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே வேளையில், ற்று மதங்களைச் சேர்ந்தவர்களின் பள்ளிகளும் திறந்து வழக்கம்போல் நடைபெற்று வருகிறது. பேருந்துகள் இயக்கப்படாததால், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச்சென்று விட்டுவிட்டு, மீண்டும் அவர்களை அழைத்துச் செல்லும் வகையில் பள்ளி வளாகத்திலேயே குழுமி இருந்தனர்.

இந்த நிலையில், இந்து முன்னணியைச் சேர்ந்த சிலர் திறந்திருந்த தனியார் பள்ளிக்கு சென்று, பள்ளியை மூட வலியுறுத்தினர். அப்போது பள்ளி வளாகத்தில் குழுமியிருந்த பெற்றோர்கள் அவரை வெளியே போகச்சொல்லி கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த  போலீசார், இந்து அமைப்பினரை அங்கிருந்து வெளியேற்றினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து திறந்திருக்கும் பள்ளிகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று பந்த் போராட்டத்தையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த டி.ஜி.பி., மனோஜ்குமார் லால் உத்தரவிட்டுள்ளார். பேருந்து நிலையம், ரயில் நிலையம் உட்பட பொதுமக்கள் கூடும் இடங்களில் நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.