சமஸ்கிருத வகுப்புகளை தொடர்ந்து நடத்துவேன். பெட்ரோல் குண்டுவீச்சுக்கெல்லாம் பயப்பட மாட்டேன் என்று சுங்க வரித்துறை முன்னாள் உதவி ஆணையரும், சமஸ்கிருத பாரதி அமைப்பின் தமிழக, கேரள பொறுப்பாளருமான ஆனந்த கல்யாண கிருஷ்ணன் தெரிவித்தார்.
கோவைப்புதூரில் வசித்து வரும் அவர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் செய்தியாளரிடம் கூறியதாவது: சுங்க வரித்துறையில் 34 ஆண்டுகள் பணியாற்றிய பின், கடந்த 2016-ம் ஆண்டு கோவை விமான நிலையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றேன்.
2000-வது ஆண்டில் சமஸ்கிருத பாரதி அமைப்புடன் தொடர்பு ஏற்பட்டது. சிறு வயதில் சமஸ்கிருதம் கற்க வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் படிக்க தோன்றவில்லை.
கல்லூரி நாட்களில் இலவசமாக நடந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து 10 நாட்களில் சமஸ்கிருதம் பேச தொடங்கினேன். மக்களுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும் என செயல்பட தொடங்கினேன்.
தற்போது வரை 70 வகுப்புகள் நடத்தி உள்ளேன். பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியசாமி கடந்த 2016-ம் ஆண்டில் நான் நடத்திய 10 நாட்கள் பயிற்சி வகுப்பில் பங்கேற்றார்.
கரோனா காலத்திலும் ஆன்லைன் மூலமாக 12 வகுப்புகள் நடத்தினேன். ஜாதி, மத பேதமின்றி சமஸ்கிருதம் கற்றுக்கொடுக்கப்படுகிறது. அரசியல் ரீதியாக எனக்கு எந்த ஆர்வமும் இல்லை. சமஸ்கிருதம் கற்றுத்தருவதே நோக்கமாகும். சமஸ்கிருதம் பாரத கலாச்சாரத்தின் ஆணிவேர்.
கோவைப்புதூரில் சுற்றுப்புற பகுதிகளில் உள்ளவர்கள் அனைவரும் நட்புணர்வுடன் வாழ்ந்து வருகிறோம். கடந்த 23-ம் தேதி இரவு 9 மணியளவில் எனது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு இருசக்கர வாகனத்தில் சிலர் தப்பிச் சென்றனர். இதுபோன்ற சம்பவங்கள் ஏற்புடையதல்ல.
நான் பயப்பட மாட்டேன். என் பணியை தொடர்ந்து மேற்கொள்வேன். மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.